மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

ட்ரம்புக்கு விருந்து: எடப்பாடிக்கு அழைப்பு!

ட்ரம்புக்கு விருந்து: எடப்பாடிக்கு அழைப்பு!

ட்ரம்புடனான விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக நாளை (பிப்ரவரி 24) இந்தியா வருகிறார். ட்ரம்ப் மனைவி மெலானியா, மகள் இவாங்கா ட்ரம்ப், மருமகன் ஜெராத் குஷனர் மற்றும் 12 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவும் இந்தியா வருகிறது. நாளை டெல்லி வருகை தரும் ட்ரம்ப் அங்கிருந்து ஆக்ரா சென்று தாஜ்மகாலை சுற்றிப் பார்க்கிறார். அந்த சமயத்தில் சுற்றுலாப் பயணிகள் யாரும் அங்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

அதன்பின்னர் விமானம் மூலம் அகமதாபாத் சர்தார் வல்லபபாய் படேல் விமான நிலையத்தில் வந்திறங்குகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக மொரடோ மைதானம் செல்லும் ட்ரம்புக்கு வழிநெடுக ஆயிரக்கணக்கான மக்கள் வரவேற்பு அளிக்கிறார்கள். மொரடோ மைதானத்தில் நடைபெறும் ‘வணக்கம் ட்ரம்ப்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். பின்னர் சபர்மதி ஆசிரமத்தையும் பார்வையிடுகிறார்.

ட்ரம்ப்பை வரவேற்பதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அகமதாபாத்தில் ட்ரம்ப் செல்லும் சாலையோரத்தில் சுவர் விளம்பரங்கள், அலங்கார தோரணங்கள், ட்ரம்ப், மோடி ஆகியோரின் சுவர் ஓவியங்கள், இந்திய-அமெரிக்க நாட்டுக் கொடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சபர்மதி ஆசிரமத்திலிருந்து ட்ரம்ப், மோடி ஆகியோர் சபர்மதி நதியை பார்வையிடுவதற்காக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை உள் துறை அமைச்சர் அமித் ஷா நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ட்ரம்பை வரவேற்க இந்தியாவே ஆவலோடு காத்திருக்கிறது. நாளை அகமதாபாத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியை ட்ரம்ப் தொடங்கி வைத்து எங்களுடன் இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

சுற்றுப் பயணத்தின்போது இறுதி நாளான 25ஆம் தேதி ட்ரம்புக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருந்தில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார். அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் ட்ரம்ப் விருந்தில் கலந்து கொள்வதற்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வரும் 24ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மற்றும் சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார். அதன்பிறகு 25ஆம் தேதி டெல்லி சென்று விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

த.எழிலரசன்

ஞாயிறு, 23 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon