மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 4 ஜுன் 2020

அதிமுக யார் கையில்? பாஜகவுக்கு செல்லூர் ராஜு பதில்!

அதிமுக யார் கையில்? பாஜகவுக்கு செல்லூர் ராஜு பதில்!

அதிமுக யார் கையிலும் இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.

பாஜக சார்பில் கிருஷ்ணகிரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ், “பாஜக இருக்கும்வரை தமிழகத்தில் ஒருபோதும் ஸ்டாலினை முதல்வராக விடமாட்டோம். சிஏஏவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு வரி இருப்பதை ஸ்டாலின் நிரூபித்தால் அரசியலைவிட்டு விலகத் தயார்” என்று சவால் விட்டதோடு, “எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடியின் கைப்பாவை என்கிறார் ஸ்டாலின். பிரதமர் கையில் முதல்வர் இருந்தால் என்ன தவறு” என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் மதுரையில் புனித மேரி ஆலயத்தில் நடந்த அன்னதான நிகழ்ச்சியை இன்று (பிப்ரவரி 23) கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கிவைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், முரளிதரராவ் சொன்னது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “யார் கையிலும் அதிமுக இல்லை. மக்கள் கையில்தான் நாங்கள் இருக்கிறோம். மக்கள்தான் எஜமானர்கள். அவர்களுக்காகத்தான் மத்திய அரசோடு இணைந்து இணக்கமாக பணியாற்றி வருகிறோம். அதிமுக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால்தான் தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரிகள் கிடைத்துள்ளன” என்று பதிலளித்தார் செல்லூர் ராஜு.

அதிமுகவின் சாதனையான குடிமராமத்து பணிகளை திமுகவினர் கண்காணிப்பதை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், “திமுக மதரீதியாக மக்களைப் பிரித்து, சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதற்காக செயல்பட்டு வருகிறது. ஆனால், சிறுபான்மையினர் நலன்களை பாதுகாக்க அதிமுக தொடர்ந்து செயல்படும் என முதல்வரும், துணை முதல்வரும் வெளியிட்ட அறிக்கை வாயிலாக தெளிவுபடுத்தியுள்ளனர். அதிமுக இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருகின்றது” என்றும் விளக்கினார்.

த.எழிலரசன்

ஞாயிறு, 23 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon