70 வயது வரை அரிதாரம் பூசி நடித்தவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வர நினைக்கும் போது, ஏன் விசிக ஆட்சிக்கு வரக்கூடாது என்று விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி விசிக சார்பில் நேற்று தேசம் காப்போம் பேரணி நடைபெற்றது. திருச்சி ராமச்சந்திரா நகரில் தொடங்கிய பேரணி கிராப்பட்டியில் நிறைவடைந்தது.பின்னர் அங்கு நடந்த மாநாட்டில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "70 வயது வரை அரிதாரம் பூசி, எல்லாத்தையும் அனுபவித்து அதிகாரத்தில் அமர நினைப்பவர்கள் இருக்கும்போது, 30 ஆண்டுக்காலம் மக்களுக்காக உழைத்த விடுதலை சிறுத்தைகள் ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது” என்று நடிகர் ரஜினி காந்த்தை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர் கூலிக்கு மாரடிக்கும் கும்பலாகவும், கோஷம் போடும் கும்பலாகவும் விசிகவினர் இருப்பார்கள் என்று கனவு காண வேண்டாம். ஒருநாள் கோட்டையில் கொடியேற்றுவோம், முதல்வரைத் தீர்மானிக்கும் சக்தியும், இந்திய அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியும் விசிகவுக்கு இருக்கிறது என்றார்.
ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு நீதிபதி பதவி வழங்குவது என்பது யாரும் போட்ட பிச்சை அல்ல. அது அம்பேத்கர் எழுதிய அரசியலைப்புச் சட்டம் தந்த உரிமை என்றார். ஆதிதிராவிடர்களுக்கு நீதிமன்ற பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என திமுக எம்.பி ஆர்.எஸ். பாரதி கூறியதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் திருமாவளவன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கவிபிரியா