மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

அமைச்சரை நீக்கச் சொல்லும் வைகோ

அமைச்சரை நீக்கச் சொல்லும் வைகோ

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை பதவியிலிருந்து நீக்க வேண்டுமென வைகோ வலியுறுத்தியுள்ளார்.

பிகார் மாவட்டம் புர்னியாவில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு பொதுக் கூட்டத்தில் மத்திய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், “பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்தபோது இந்தியாவில் இருந்த முஸ்லிம்கள் அனைவரையும் அந்நாட்டுக்கு அனுப்பிவிட்டு, அந்நாட்டில் இருந்து ஹிந்துக்களை அழைத்து வந்திருக்க வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டம் தேவைப்பட்டிருக்காது. அதனால் ஏற்பட்ட விளைவுகளை நாம் அனுபவித்து வருகிறோம்” என்று தெரிவித்திருந்தார். இதற்கு பலத்த கண்டங்கள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக இன்று (பிப்ரவரி 23) அறிக்கை வெளியிட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “கிரிராஜ் சிங் மக்களுக்கிடையே வெறுப்பை விதைத்து, சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கின்ற வகையில் தொடர்ந்து பேசி வருகின்றார். டெல்லி ஷாகீன்பாக் போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் என்றெல்லாம் பேசியதற்காக, ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களால் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கின்றார், இவரைப் போன்றவர்களின் வெறிப்பேச்சுகளால்தான் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றோம் என அமித் ஷா கூறியுள்ளார். " எனத் தெரிவித்தார்.

கிரிராஜ் சிங் கவனமாகவும் பொறுப்பாகவும் பேச வேண்டும் என, பாஜக தலைவர் நட்டா கூறிய ஒரு வார காலத்திற்குள், அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், மீண்டும் நச்சுக் கருத்துகளை விதைக்கின்றார் என்று கண்டனம் தெரிவித்த வைகோ, “இந்திய விடுதலையின்போதே, முஸ்லிம்கள் அனைவரையும் பாகிஸ்தானுக்கு அனுப்பி இருக்க வேண்டும், அப்படிச் செய்யாததன் விளைவை, இன்று நாம் சந்தித்துக்கொண்டு இருக்கின்றோம் என்று பேசி இருக்கின்றார்.இதுதான் பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடா? என்பதை, அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும்” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “1947 க்கு முன்பு, இந்தியா என்ற நாடே கிடையாது. இது இந்துக்கள் நாடு என்று சொல்வதற்கும் இடம் இல்லை. இந்தியா என்ற நாட்டுக்கான அரசு அமைப்புச் சட்டத்தை ஆக்கித் தந்த நம் முன்னோர்கள், இது இந்துக்கள், இசுலாமியர்கள், கிறித்தவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள் என பல மதங்கள், பல்வேறு பண்பாடுகள் நிலவுகின்ற நாடு என்பதை தெளிவுபட வரையறுத்துக் கூறி இருக்கின்றார்கள்” என குறிப்பிட்டுக் காட்டிய வைகோ, மத்திய அமைச்சராகப் பொறுப்பு ஏற்றபோது, அரசு அமைப்புச் சட்டத்தின் மீது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்ற கிரிராஜ் சிங்கை, அமைச்சர் பதவியில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடி நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

த.எழிலரசன்

ஞாயிறு, 23 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon