எழுவர் விடுதலை தொடர்பான மத்திய அரசின் வாதத்திற்கு சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றி கடந்த 2018 செப்டம்பர் மாதம் ஆளுநருக்கு அனுப்பிவைத்தது. அதன் மீது ஆளுநர் இதுவரை முடிவெடுக்கவில்லை. இந்த நிலையில் ஏழு பேரில் ஒருவரான நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு கடந்த 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மத்திய விசாரணை அமைப்பு விசாரித்த வழக்கில், மத்திய அரசை கலந்தாலோசித்துதான் மாநில அரசு முடிவெடுக்க முடியும். எழுவரின் விடுதலை தொடர்பாக மத்திய அரசு ஒப்புக்கொள்ளும் வரை தமிழக அரசின் தீர்மானம் ஜீரோதான்” என்று வாதிட்டார்.
இதுதொடர்பாக விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது கருத்து தெரிவித்த சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான விஷயம் ஆளுநரின் கையில் உள்ளது. இதில் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுக்க வேண்டும். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் வழக்கறிஞர், தேவையற்ற மற்றும் தனது தகுதிக்கு குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார். இது ஒரு நான்சென்ஸ் ஸ்டேட்மெண்ட். இது கண்டனத்திற்குரியது” என்று தெரிவித்தார்.
மேலும், மாநில அரசின் அதிகாரத்தை கேள்வி கேட்கும் உரிமையை மத்திய அரசின் வழக்கறிஞருக்கு யார் கொடுத்தது என்று கேள்வி எழுப்பிய அவர், “மத்திய அரசின் கீழ் வரும் குற்றங்களுக்குதான் மத்திய அரசினுடைய அனுமதியை பெற வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரின் கருணை மனு, ஆளுநரிடம் இருக்கும்போது அதுதொடர்பாக அவர் உத்தரவு பிறப்பிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது” என்றும் குறிப்பிட்டார்.
த.எழிலரசன்