மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

மீதி கோரிக்கைகளையும் அதிமுக நிறைவேற்றும்: அன்புமணி

மீதி கோரிக்கைகளையும் அதிமுக நிறைவேற்றும்: அன்புமணி

மாவட்டம் தோறும் இளைஞர், இளம்பெண்கள், மக்கள் படையை அமைத்துள்ள அன்புமணி மீண்டும் மீண்டும் அவர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் . நேற்று (பிப்ரவரி 22) பாமக சார்பில் முப்படைகள் சந்திப்பு கூட்டம் மாநிலத்தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெற்றது.

முப்படையினரிடம் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி பேசினார்.

“திமுக தலைவர் ஸ்டாலினிடம் எந்த திட்டமும் இல்லை. ஆனால் முதல்வராகவேண்டுமென்ற கனவு மட்டுமே உள்ளது. பாமக ஆட்சிக்கு வந்தால் இந்திய மாநிலங்கள் எதனோடும் ஒப்பிடாமல் சிங்கப்பூரை ஒப்பிடும் அளவுக்கு உயர்த்திக்காட்ட திட்டம் உள்ளது. கல்வி, சுகாதாரம், விவசாயத்திற்கு திட்டங்கள் உள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைப்பது தொடர்பாக நாம் 2015ம் ஆண்டு நிழல் நிதி நிலை அறிக்கையில் தெரிவித்தோம். இது குறித்து முதல்வரிடம் ஜி.கே.மணியோடு சென்று வலியுறுத்தினோம். இது பாமகவிற்கு கிடைத்த முழுமையான வெற்றி” என்றார்.

தொடர்ந்து வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, “ பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற வார்த்தையை பாமகதான் முதலில் சொன்னது. அதிமுக கூட்டணியில் சேர 10 நிபந்தனைகள் விதித்தோம். அதில் முதல் நிபந்தனை இதுவாகும். எங்களின் மற்ற நிபந்தனைகளை இந்த அரசு நிறைவேற்றும். இதில் திமுக அரசியல் செய்து கொண்டு இந்த மசோதா தாக்கல் செய்தபோது திமுக வெளிநடப்பு செய்தது. விவசாயிகள் தங்களின் எதிரியாக திமுகவை பார்க்கின்றனர். டெல்டா பகுதியை நாசம் செய்ததே திமுகதான். கடலூர், நாகை மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ள பெட்ரோ கெமிக்கல் பார்க் தொடங்க திமுக காலத்தில் அனுமதிக்கப்பட்டது. இதை பாமக எதிர்த்தது. தற்போது அரசு இத்திட்டத்தை ரத்து செய்வதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதை பாமக வரவேற்கிறது.

குடிரிமை சட்டம் தொடர்பாக சிறுபான்மை மக்களிடம் திமுக தவறான கருத்துகளை பரப்பிவருகிறது. இச்சட்டம் குடியுரிமை கொடுக்கும் சட்டம், பறிக்கும் சட்டம் கிடையாது. இஸ்லாமிய சகோதரர்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது. போராட்டத்தை விலக்கிக்கொள்ளவேண்டும். இந்த போராட்டத்தால் பிரிவினை உருவாகிக்கொண்டுள்ளது. இதுதான் அச்சமாக உள்ளது. இதைவைத்து திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசியல் செய்துவருகின்றனர்”என்று குற்றம் சாட்டினார்.

-வேந்தன்

ஞாயிறு, 23 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon