பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டணத்தில் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு 1.38 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று (பிப்ரவரி 22) நடைபெற்றது. விழாவில் கலந்துகொள்ள வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை தினத்தந்தி நிர்வாக இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் வரவேற்றார்.
மணிமண்டபத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மணிமண்டபத்தில் உள்ள சிவந்தி ஆதித்தனாரின் உருவச் சிலையையும் திறந்தார். பின்னர் அங்கிருந்த நூலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளையும் சுற்றிப்பார்த்தார்.
விழாவில் உரையாற்றிய முதல்வர், “நிருபராக, துணை ஆசிரியராகப் பத்திரிகையின் அனைத்து துறைகளிலும் கற்றுத் தேர்ந்த பா.சிவந்தி ஆதித்தனார், இந்திய துணைக் கண்டத்தில், பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளிலும் பெரும் சாதனையாளராகத் திகழ்ந்தார்” என்று புகழாரம் சூட்டினார்.
தமிழக அரசு நிறைவேற்றிய திட்டங்கள் தொடர்பாக பேசிய முதல்வர், “ஒரு சிலர் போல் நாங்கள் இல்லை. வாய்ச்சொல் வீரராக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்காமல், சாத்தியமான திட்டங்களை மட்டும் அறிவித்து தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதைக் கூறும்போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. மூன்று பேர் சேர்ந்து ஒரு லாட்டரி சீட்டு வாங்கினார்கள். பரிசு விழுந்தால் கடவுளுக்கு சம பங்கு தருவோம் என்று முடிவு செய்தார்கள். சில நாட்களில் அவர்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்குப் பரிசு விழுந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. பணத்தை வாங்குவதற்கு முன் மூன்று பேருக்கும் ஒரே சிந்தனை தோன்றியது. கடவுளுக்கு ஒரு பங்கு தருவோம் என்று சொன்னோமே, அப்படி தரக் கூடாது என்று முடிவு செய்தார்கள்.
அவசரப்பட்டு கடவுளுக்கு ஒரு பங்கு தருவதாகச் சத்தியம் செய்து விட்டோமே, அதிலிருந்து எப்படி தப்புவது என்ற சிந்தனையே மூவரின் மனத்திலும் ஓடிக் கொண்டிருந்தது. சரி எவ்வளவு பங்கு, எவ்வளவுதான் கொடுக்கலாம் என யோசித்தபோது, முதல் நபர், ‘தரையில் ஒரு சிறிய வட்டம் வரைவோம், எல்லாப் பணத்தையும், நாணயங்களாக்கி மேல் நோக்கி எறிவோம். சின்ன வட்டத்துக்குள் விழுவது கடவுளுக்கு’ என்றான்.
இரண்டாவது நபரோ, ‘கூடாது, கூடாது. மிகப் பெரிய வட்டம் வரைவோம். நடுவில் நின்று கொண்டு பணத்தை மேல் நோக்கி எறிவோம். அந்த வட்டத்துக்கு வெளியே எவ்வளவு பணம் விழுகிறதோ அது கடவுளுக்கு’ என்றான். இருவரும் சொன்னதைக் கேட்ட மூன்றாவது நபர், ‘சிறிய வட்டமாவது, பெரிய வட்டமாவது பணத்தை மேலே வீசி எறிவோம். மேலே நின்று விடுகின்ற பணம் கடவுளுக்கு, கீழே விழுகின்ற பணம் நமக்கு’ என்றான். இவர்களிடம் நற்குணம் இல்லாதது மட்டுமல்ல, கடவுளை விட தாங்களே கெட்டிக்காரர்கள் என்ற ஆணவமும் இருந்தது” என்று தெரிவித்தவர்,
“இவர்களைப் போன்ற சிலர், செய்ய முடியாதவற்றை எல்லாம் செய்வோம் என உண்மைக்கு மாறானவற்றை மக்களிடம் கூறி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விட்டனர். ஆனால், அவர்கள் இந்த மூன்று நபர்களைப் போல் சொன்னதைச் செய்யவில்லை. அதற்கு வேறு விளக்கங்கள் கொடுத்து வருகின்றனர். ஆனால், அவர்களைப் பற்றி நன்கு அறிந்து கொண்ட மக்கள், அவர்களுக்குத் தக்க தண்டனையை சமீபத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் வழங்கினார்கள். இனிமேலும் இதைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருப்பார்கள்” என்றும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சாடினார்.
-த.எழிலரசன்