மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

பெட்ரோலிய மண்டலம்-விவசாயத்தைக் காப்பாற்றிய பாமக: ராமதாஸ்

பெட்ரோலிய மண்டலம்-விவசாயத்தைக் காப்பாற்றிய பாமக: ராமதாஸ்

பெட்ரோலிய மண்டல அரசாணை ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு பாமக வரவேற்பு தெரிவித்துள்ளது.

கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 45 கிராமங்களில் 57500 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, அவற்றில் பெட்ரோலிய இரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் (Petrolium, Chemicals and Petrochemicals Investment Region -PCPIR) அமைப்பதற்கு 2017ஆம் ஆண்டு ஜூலை 19 இல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு அப்போதே அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், “பெட்ரோலிய மண்டல அறிவிப்பாணை ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இதனையடுத்து, பெட்ரோலிய இரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் தொடர்பான அரசாணையை இன்று (பிப்ரவரி 22) தமிழக அரசு ரத்து செய்தது.

காவிரி பாசன மாவட்டங்களின் வேளாண் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருந்த இத்திட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று கருத்து தெரிவித்த அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இது பாமகவிற்கு கிடைத்த வெற்றி எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து அவரது அறிக்கையில், “இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என்பதால் இத்திட்டத்திற்கு பாமக எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நாசகார திட்டத்தை கைவிடாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தேன்.

அதன்பின்னர் 2018-ஆம் ஆண்டில் நாகார்ஜுனா நிறுவனம் திவால் ஆன நிலையில், அந்நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படவிருந்த பெட்ரோலிய முதலீட்டு மண்டலத்தை கைவிடும்படி மீண்டும் கோரிக்கை விடுத்தேன். அதன்பயனாக கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் செயல்படுத்தப்படவிருந்த பெட்ரோலிய முதலீட்டு மண்டலத்தை கைவிடுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கின்றன” என்று விளக்கியுள்ளார்.

கடலூர் மாவட்ட மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கு சிப்காட் வளாகத்தில் உள்ள ஆலைகளால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டித்தும், அவற்றை போக்க வலியுறுத்தியும் கடந்த 15 ஆண்டுகளாக ஏராளமான போராட்டங்களை நான் நடத்தியுள்ளேன். அதே நோக்கத்துடன் தான் சுற்றுச்சூழலை சீரழிக்கக்கூடிய பெட்ரோலிய முதலீட்டு மண்டலத்திற்கு எதிராகவும் பா.ம.க. சார்பில் தொடர் இயக்கங்கள் நடத்தப்பட்டன என்று தெரிவித்த ராமதாஸ்,

“அதேபோல், நாகை மாவட்டத்திலும் ஏராளமான மின்சாரத் திட்டங்களும், கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் விவசாயம் அழிந்து போயிருக்கும்” எனச் சுட்டிக்காட்டினார்.

மேலும், “இத்திட்டம் கைவிடப்பட்டிருப்பதன் மூலம் இரு மாவட்டங்களும் காப்பாற்றப்பட்டுள்ளன. இதற்காக தமிழக அரசுக்கு பாமக நன்றி தெரிவித்துக் கொள்கிறது. விவசாயத்தை பாதிக்கும் இத்திட்டத்தை கைவிடச் செய்து விவசாயத்தை காப்பாற்றியதில் பா.ம.க. பெருமிதம் அடைகிறது” என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

த.எழிலரசன்

சனி, 22 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon