மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

தேசம் காப்போம்: திருச்சியில் திரண்ட சிறுத்தைகள்!

தேசம் காப்போம்: திருச்சியில் திரண்ட சிறுத்தைகள்!

சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் விசிக சார்பில் பேரணி நடைபெற்றது.

குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர், என்.ஆர்.சிக்கு எதிராக தமிழகம் முழுவதும் தீவிரமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் மிகப்பெரிய பேரணி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.

அதன்படி இன்று (பிப்ரவரி 22) பிற்பகல் திருச்சி ஆர்.சி.நகர் கூட்டுச் சாலையில் தொடங்கிய பேரணியை திருமாவளவன் வழிநடத்த விசிகவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சிஏஏ எதிர்ப்பு பதாகைகளுடன் கலந்துகொண்டனர். அப்போது சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டுமெனவும், தேசம் காப்போம், சனாதனம் காப்போம் எனவும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சிஏஏ எதிர்ப்பு பலூன்களும் பறக்கவிடப்பட்டன. பேரணி 2.5 கி.மீ தூரம் வரை சென்று உழவர் சந்தையில் முடிந்தது. விசிகவின் பேரணியால் திருச்சியின் பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

பேரணி முடிவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “இந்த திருத்தச் சட்டம் மதரீதியான வன்முறைக்கு வழிகோலும் என்று பல்வேறு நாடுகளும் சுட்டிக்காட்டியுள்ளன. பஞ்சாப், மேற்கு வங்கம், கேரளா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், தெலுங்கானா முதலான மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் இந்த சட்டத்தை எதிர்த்து சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியாவின் மக்கள்தொகையில் பெரும்பாலான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையிலும் ’இந்த சட்டத்தைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை’ என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். இது மக்களாட்சியின்மீதும், அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் அவருக்கு நம்பிக்கை இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. மக்களின் உணர்வுகளையும், மாநில அரசுகளின் தீர்மானங்களையும் மதித்து குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், தேசிய மக்கள் தொகைப் பதிவேடு நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்றும், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், இடஒதுக்கீடு உரிமையைப் பாதுகாத்திட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

த.எழிலரசன்

சனி, 22 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon