மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

அரியலூரிலும் ஹைட்ரோ கார்பன்: சந்தேகம் எழுப்பும் திமுக!

அரியலூரிலும் ஹைட்ரோ கார்பன்: சந்தேகம் எழுப்பும் திமுக!

வேளாண் மண்டலத்தில் அரியலூர் இடம்பெறாததற்கு திமுக முன்னாள் எம்.எல்.ஏ சிவசங்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேம்படுத்தும் சட்ட முன்வடிவு முதல்வரால் சட்டமன்றத்தில் கடந்த 20ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக நிறைவேற்றப்பட்டது. அதில் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்கள் முழுவதும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளும் வேளாண் மண்டலத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், டெல்டா பகுதிக்குள் வரும் திருச்சி, அரியலூர், கரூர் ஆகிய பகுதிகள் இடம்பெறாதது அப்பகுதி விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சட்டமன்றத்தில் ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், “டெல்டா விவசாய நிலங்கள் கடல் நீரில் மூழ்க வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், கடலை ஒட்டியுள்ள டெல்டா மாவட்டங்களை இதில் இணைத்துள்ளோம்.அரியலூரில் முழுக்க முழுக்க சிமெண்ட் தொழிற்சாலைகள் உள்ளன. அதேபோல கனிம வளங்கள் நிறைந்த மாவட்டம். நமக்கு விவசாயம் ஒரு கண் என்றால் தொழில்வளர்ச்சி மற்றொரு கண். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும் என்றால் தொழிற்சாலைகள் வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதற்கு இன்று (பிப்ரவரி 22) பதிலளித்துள்ள திமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.சிவசங்கர், “அரியலூர் மாவட்டம் விவசாயத்தை நம்பி இருக்கும் மாவட்டம். மாவட்டத்தில், சிமெண்ட் ஆலைகள் நிறைய இருந்தாலும், அதனால் மாவட்ட மக்களுக்கு எந்தவித பயனும் கிடையாது. விவசாயம் தான் இந்த மாவட்டத்தின் உயிர்நாடி.அதில் குறிப்பாக கொள்ளிடம் ஆற்றை ஒட்டி அமைந்துள்ள திருமானூர், தா.பழூர் ஒன்றியங்கள் முழுதும் விவசாயத்தை நம்பி இருப்பவை. ஏற்கனவே இவை டெல்டா பகுதிகளாக அரசால் கருதப்பட்டு வந்தவை. அதற்கான பலனை விவசாயிகள் அனுபவித்து வந்தனர். அரியலூர் மாவட்டத்தை இந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இணைக்காதது மிகப் பெரும் தவறு ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “அரியலூர் பகுதிகளில் 70 சதவிகித மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டுள்ளனர். காவிரி நதிநீர் மூலம் தா.பழூர், திருமானூர் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதிகளில் 10,389 ஹெக்டேர் (25671 ஏக்கர்) அளவுக்கு விவசாயம் நடைபெறுகிறது என்று அரியலூர் மாவட்ட அரசு இணையதளம் கூறுகிறது.

அதாவது கொள்ளிடம் கரையோரம் அமைந்துள்ள திருமானூர், தா.பழூர் ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் கொள்ளிடம் நீராதாரத்தைக் கொண்டே விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. புள்ளம்பாடி வாய்க்காலின் மூலம் திருமானூர் பகுதியிலுள்ள 6000 ஹெக்டேர் நிலமும், நந்தியாறு மூலமாக 2,000 ஹெக்டேரும், பொன்னாறு மூலமாக 1877 ஹெக்டேரும், வடவாறு மூலமாக 463 ஹெக்டேரும் பாசன வசதி பெறுகின்றன.இந்தப் பகுதிகளில் நெல் பெருமளவில் விளைவிக்கப் படுகிறது. இப்போது இந்தப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்காததால் பல பாதிப்புகள் வரும்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்டங்கள் அடிப்படையில், 5 இடங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆழ்குழாய் கிணறு அமைத்து பணிகளை துவங்கியுள்ளது. இந்த சட்டமசோதாவில் அரியலூர் மாவட்டத்தை இணைக்காததால் அவர்கள் இனி முழு வீச்சில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நடைமுறைப் படுத்துவார்கள் என்று அச்சம் எழுப்பியுள்ள சிவசங்கர், “இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவேகமாக குறையும். ஏற்கனவே மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது என்ற புகார் விவசாயிகளால் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்முறைக்கு வந்தால், அரியலூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்வை முழுவதுமாக சீரழித்து விடும்.

அரியலூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சேர்க்காததற்கு மாவட்டத்தில் தொழிற்சாலைகள் உள்ளன என்ற காரணத்தை கூறுகிறார்கள். சிமெண்ட் ஆலைகள் அரியலூர் மற்றும் செந்துறை ஒன்றியங்களிலேயே அமைந்துள்ளன. சுண்ணாம்புக்கல் சுரங்கங்களும் இந்த ஒன்றியங்களிலேயே அமைந்துள்ளன. எனவே இது ஒரு ஏமாற்றுக் காரணமே ஆகும்” என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்ட மசோதாவை தாக்கல் செய்த உடனேயே இதன் பாதிப்பு அரியலூர் மாவட்டத்தில் தெரிய ஆரம்பித்து விட்டது. விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் பொறியியல் துறை மூலமாக வாடகைக்கு வழங்கப்பட்டு வந்த நெல் அறுவடை இயந்திரம் கிடைக்காது என்றும், அடுத்தக்கட்டமாக அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படும் என்றும் செய்திகள் அரியலூர் மாவட்ட விவசாயிகள் மத்தியில் பரவி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சட்ட மசோதாவில் அரியலூர் மாவட்டம் இடம் பெறாதது அ.தி.மு.கவினருக்கே வருத்தமாக உள்ளது. பொதுமக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்” என்றும் கூறியுள்ளவர்,

உடனடியாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள செம்பியக்குடி துவங்கி அணைக்கரை வரையிலான திருமானூர் மற்றும் தா.பழூர் ஒன்றியங்களை "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில்" இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

த.எழிலரசன்

அரியலூர், திருச்சி, கரூர்-டெல்டாவை பிரித்தாளும் எடப்பாடி: வெடிக்கும் விவசாயிகள்!

சனி, 22 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon