மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

வேளாண் மண்டலச் சட்டத்தில் குறை: ஒப்புக்கொண்டாரா அமைச்சர்!

வேளாண் மண்டலச் சட்டத்தில் குறை: ஒப்புக்கொண்டாரா அமைச்சர்!

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 14ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பட்ஜெட்டை வாசித்து முடித்ததும், அவை நடவடிக்கை முடிந்தது. பின்னர் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நான்கு நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

இறுதி நாளன்று காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேம்படுத்தும் சட்ட மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். அதில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வெளிநடப்பு செய்தன. அதிமுக உறுப்பினர்களின் ஆதரவோடு மசோதா நிறைவேறியது. இதனையடுத்து, சட்டமன்றக் கூட்டத் தொடரை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தள்ளிவைத்தார்.

இந்த நிலையில் சட்டமன்றக் கூட்டத் தொடர் குறித்து திமுகவினருக்கு இன்று (பிப்ரவரி 21) கடிதம் எழுதியுள்ள ஸ்டாலின், “மாநிலத்திற்கான உரிமைகளையும் தேவைகளையும் பெறுவதற்கான வேட்கையோ வலிமையோ இந்த அடிமை அரசாங்கத்திற்கு இல்லை என்பதை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையும் அதனைத் தொடர்ந்து நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரும் அம்பலமாக்கிவிட்டன” என்று விமர்சித்தார்.

அப்போது சிஏஏ, என்.பி.ஆர், டிஎன்பிஎஸ்சி முறைகேடு, தகுதி நீக்க விவகாரம், இரட்டை குடியுரிமை, எழுவர் விடுதலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பியது குறித்தும், அதற்கு அரசு அளித்த பதில் என்ன என்பது குறித்தும் விரிவாக விவரித்த ஸ்டாலின், வேளாண் மண்டலம் தொடர்பாக பேசியதையும் தெரிவித்தார்.

“பேரவையில் வேளாண் மண்டலம் குறித்த தீர்மானம் நிறைவேற்றுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் அது எங்களுக்கு வழங்கப்பட்டது. பொதுவாக இத்தகைய தீர்மானங்களை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி ஆலோசித்தே அதன்பிறகு உரிய திருத்தங்களை மேற்கொண்டு நிறைவேற்றுவது வழக்கம். அதனைப் பேரவையில் வலியுறுத்தினேன். எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகனும், இந்தத் தீர்மானம் உண்மையாகவே பயன் தரும் வகையில் அமைந்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆலோசனைகளை எடுத்துரைத்தார். ஆளுந்தரப்பில் அமைச்சர் சி.வி.சண்முகம் இதில் குறைகள் உண்டு என்பதை ஒப்புக்கொண்டார்” என்று சுட்டிக்காட்டிய ஸ்டாலின்,

“ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை ரத்து செய்யாமல், திருச்சி-கரூர்-அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்காமல், ரியல் எஸ்டேட் போன்ற மனை விற்பனைக்கான வரைமுறைகளை வகுக்காமல், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயல்திட்டங்களில் கவனம் செலுத்தாமல், மத்திய அரசிடம் அளிக்கப்பட்ட கடிதத்திற்கான பதில் என்ன என்பதை விளக்காமல், அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலமாக –அலங்கோலமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, அதனைத் தேர்வுக்குழுவுக்கு அனுப்பி, முறையாக நிறைவேற்ற வலியுறுத்தினேன். விவசாயி போல ஒப்பனை மட்டுமே போட்டுக்கொள்ளும் முதல்வரின் தலைமையிலான அரசு அதனை ஏற்காத காரணத்தால், பேரவையிலிருந்து அடையாள வெளிநடப்புச் செய்தோம்” என்றும் விளக்கினார்.

மேலும், “காவிரிப் பாசன விவசாய அமைப்பினரும், பூவுலகின் நண்பர்கள் போன்ற இயற்கை ஆர்வலர்களும் இந்தத் தீர்மானம் முழுமையானதல்ல, வெறும் கானல் நீர் என்பதையும், மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டங்கள்-கடலோரப்பகுதித் திட்டங்கள் ஆகியவற்றை ரத்து செய்யாமல் வேளாண் மண்டலம் அமைக்க முடியாது; பயன் தராது என்பதையும் விரிவாக எடுத்துக்காட்டியுள்ளனர். இதுதான் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியின் உண்மையான நிர்வாகத் திறன்” என்றும் கூறியதோடு, மத்திய அரசின் தயவில், பா.ஜ.கவின் கண்ணசைவில், ஆட்சி நடக்கின்ற காரணத்தால், மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கலாம் என எடப்பாடி பழனிச்சாமியும் அவரது சகாக்களும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சாடினார் ஸ்டாலின்.

த.எழிலரசன்

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon