மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

பாதுகாப்பு ஒத்திகை: முஸ்லீம்கள் தீவிரவாதிகளா?

பாதுகாப்பு ஒத்திகை: முஸ்லீம்கள் தீவிரவாதிகளா?

பாதுகாப்பு ஒத்திகையின்போது முஸ்லீம்கள் தீவிரவாதிகளாக சித்தரித்ததற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குள் தீவிரவாதிகள் நுழைந்தால் எப்படி மீட்பு நடவடிக்கையை மேற்கொள்வது என்பது தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை சென்னை காவல்துறையால் நேற்று நடத்திக்காட்டப்பட்டது. இந்த பாதுகாப்பு ஒத்திகையில், கமாண்டோ வீரர்கள், சென்னை காவல்துறையின் அதிரடிப்படை வீரர்கள் என பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த காவலர்கள் பங்கேற்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தீவிரவாதி ஒருவரை கடத்திச் செல்ல சக தீவிரவாதிகள் அங்கு நுழைகின்றனர். இந்தத் தகவலறிந்து கமாண்டோ படை வீரர்கள் உள்ளே புகுந்து தீவிரவாதிகளை சுட்டு மருத்துவமனையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றனர். இந்த பாதுகாப்பு ஒத்திகையின்போது ரப்பர் குண்டுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பாதுகாப்பு ஒத்திகை தொடர்பாக இன்று (பிப்ரவரி 22) கருத்து தெரிவித்துள்ள மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, “பாதுகாப்பு ஒத்திகையில் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபடுபவர்கள் அனைவரும் முஸ்லிம்களின் மத அடையாளமாக விளக்கும் தாடியைச் செயற்கையான முறையில் ஒட்டிக்கொண்டு பயங்கரவாதிகளாக அடையாளம் காணப்பட்டதை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு ஒத்திகை என்பது எவ்வளவு அவசியமானது என்பதை உணர்த்த நடத்தப்பட்ட நிகழ்வில் முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் எனச் சாமானிய மனிதர்களின் மனதில் பதிய வைத்து முஸ்லிம் அல்லாதோர் முஸ்லிம்களை வெறுக்கவும், அவர்களை பொது இடங்களில் சந்தேகப் பார்வையுடன் பார்க்கவும் இந்த ஒத்திகை உதவும் என்று சுட்டிக்காட்டியுள்ள ஜவாஹிருல்லா, “இந்த முஸ்லிம் வெறுப்பு ஒத்திகையை நடத்திய சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

த.எழிலரசன்

சனி, 22 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon