மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

நாகை, கடலூர் பெட்ரோலிய மண்டலம்: அரசாணை ரத்து!

நாகை, கடலூர் பெட்ரோலிய மண்டலம்: அரசாணை ரத்து!

நாகை, கடலூர் மாவட்டங்களில் பெட்ரோலிய மண்டலம் அமைப்பது தொடர்பான அரசாணையை தமிழக அரசு ரத்து செய்தது.

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்டம் நேற்று முன்தினம் முதல்வரால் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த சட்டம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.

முன்னதாக கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 45 கிராமங்களில் 57500 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, அவற்றில் பெட்ரோலிய இரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் (Petrolium, Chemicals and Petrochemicals Investment Region -PCPIR) அமைப்பதற்கு 2017ஆம் ஆண்டு ஜூலை 19 இல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு அப்போதே அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே வேளாண் மண்டல சட்டம் தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “பெட்ரோலிய மண்டல அறிவிப்பாணை இரத்து செய்யப்படும் என்று முதல்வர் அறிவிக்காதது ஏன்? அப்படியானால், கடலூர், நாகை மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்கள் வேளாண் பாதுகாப்பு மண்டலத்தின் கீழ் சேர்க்கப்படவில்லையா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

விசுவரூபமெடுக்கும் இந்தக் கேள்விகளுக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்குமா என்றும், அனைத்து திட்டங்களையும் முழுமையாக தடை செய்தால் மட்டுமே வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்று அறிவிப்பதும், சட்டம் இயற்றுவதும், செயல் வடிவம் பெறும். இல்லையேல், வெற்று ஆரவார அறிவிப்பாகப் போய்விடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 45 கிராமங்களில் பெட்ரோலிய இரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருகள் முதலீட்டு மண்டலம் (Petrolium, Chemicals and Petrochemicals Investment Region -PCPIR) அமைப்பதற்கு 2017ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து தமிழக அரசு இன்று (பிப்ரவரி 22) உத்தரவிட்டுள்ளது.

த.எழிலரசன்

சனி, 22 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon