�அறிவாலயப் பேச்சு… ஐடிக்கு எப்படிப் போச்சு?- அய்யாதுரை பாண்டியன் ரெய்டு பின்னணி

politics

திமுக வர்த்தகப் பிரிவின் மாநில துணைத் தலைவரான அய்யாதுரை பாண்டியனுக்குச் சொந்தமான ஹோட்டல்கள், நிறுவனங்களில் நேற்று (பிப்ரவரி 21) காலை முதல் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினார்கள். சென்னையில் இருந்த அய்யாதுரை பாண்டியனுக்கு தகவல் அனுப்பி அவரையும் நெல்லைக்கு வரச் சொல்லி சில ஆவணங்களில் வருமான வரித் துறையினர் கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள்.

திமுக மாநில வர்த்தகர் அணியின் துணைத் தலைவராக இருக்கும் அய்யாதுரை பாண்டியன் திமுகவுக்கு வந்த கதை வித்தியாசமானது. கல்பதரு என்ற குஜராத்தை சேர்ந்த மின்சார நிறுவனத்தில் பெரும் பொறுப்பில் இருந்த அய்யாதுரை பாண்டியன் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கு சொந்தக்காரர். ஒருகட்டத்தில் அந்நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கும் இவருக்கும் பிரச்சினை வர அங்கிருந்து வெளியேறினார்.

நெல்லை வட்டாரத்தில் அய்யாதுரை பாண்டியன் காலடி எடுத்து வைத்த இடத்திலெல்லாம் கரன்சிவெள்ளம் பாயும். அண்மையில் நடந்த தாமிரபரணி புஷ்கரத்தில் குளிக்க வந்தவர் தனக்கு வணக்கம் வைத்தோருக்கெல்லாம் ஐநூறு, ஆரத்தி எடுத்தவர்களுகெல்லாம் ஆயிரம் என்று போட்டார். “தமிழ்நாட்டுக்கு நன்மை செய்யும் கட்சி எது,குறிப்பாக நெல்லை மாவட்டத்துக்கு நன்மை செய்யும் கட்சி எது என்று அறிந்து அந்தக் கட்சியில் சேர்வேன்” என்று புஷ்கரத்தின் போது பேட்டியும் கொடுத்தார் அய்யாதுரை பாண்டியன்.

நன்மை என்றால் அவரது பாஷையில் நல்ல பதவி என்று பொருள். ஏற்கனவே ஓ.பன்னீர் உள்ளிட்டவர்களுக்கு நன்கு அறிமுகமான அய்யாதுரை பாண்டியனின் பணத்தைப் பார்த்து திமுக அவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்தது. 2018 ஆம் ஆண்டு திமுகவில் அவர் இணைந்த பிறகு அவருக்கு மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது.

இவரைப் பற்றி நம்மிடம் பேசிய திமுகவினர், “ இந்தப் பதவியை வைத்து தென் மாவட்டங்களையே கலக்கிக் கொண்டிருந்தார் அய்யாதுரை பாண்டியன். தன்னைப் பார்க்க கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள் யார் வந்தாலும் பத்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரை என அடித்துவிட்டார். அறிவாலயம் வரை இவரின் பணம் பாய்ந்தது. ஒருகட்டத்தில் அடுத்தடுத்த பதவிகளைப் பெறமுயற்சி செய்தார். தனக்கென ஒரு கோஷ்டியை உருவாக்கத் துணிந்தார். நிகழ்ச்சிகளில் மாவட்டச் செயலாளர் பெயர்களை தன் பெயருக்கு கீழே போடுமாறு தன் கோஷ்டியினருக்கு உத்தரவிட்டார். கடையநல்லூர் சீட்டை எப்படியாவது வாங்கிடுவேன் எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் செலவழிக்கத் தயார் என்று தன் வட்டாரத்தில் சொல்லிக் கொண்டிருந்த அய்யாதுரை பாண்டியனின் நடவடிக்கைகள் பற்றி தலைமைக் கழகத்துக்குப் புகார்கள் போயின. ஆனால் அங்கே இவரின் ஆட்கள் இருந்தபடியால் புகார் தாள்கள் எல்லாம் கரன்சியின் தாள்களால் காணாமல் போயின.

இந்த நிலையில்தான் கடந்த 19 ஆம் தேதி அறிவாலயத்தில் நடந்த மாநில வர்த்தகர் அணிக் கூட்டத்தில் பேசிய அய்யாதுரை பாண்டியன், ‘எனக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கு. கட்சிக்காக என்ன வேண்டுமானாலும் பண்ணுவேன். எனக்குக் கீழே எத்தனை பேரு வேலை பாக்குறாங்க தெரியுமா?’என்றெல்லாம் பேசியிருக்கிறார். அறிவாலயத்தில் 19 ஆம் தேதி பேசி முடித்து 21 ஆம் தேதி ஐடி ரெய்டு வருகிறது. ஏற்கனவே இவரது மெகா சொத்துகள் பற்றி ஐடி கண் வைத்திருந்தாலும் மாநில வர்த்தகர் அணி கூட்டத்தில் இவர் பேசிய பேச்சை அறிவாலயத்தில் இருந்த வர்த்தகர் அணி நிர்வாகிகளில் யாரோ ஐடிக்கு பாஸ் பண்ணிவிட்டார்கள். அதனால் ஏற்கனவே அய்யாதுரை பாண்டியன் மீது ரெய்டு நடத்த திட்டமிட்டிருந்த வருமான வரித்துறையினர் உடனடியாக நடத்திவிட்டனர். அறிவாலயப் பேச்சு ஐடிக்கு எப்படிப் போச்சு என்பதுதான் அய்யாதுரை பாண்டியனின் இப்போதைய கவலை” என்கிறார்கள்.

இந்த ரெய்டு பற்றி திமுக தலைமை என்ன கருதுகிறது?

நேற்று ரெய்டு நடந்த நிலையில் இன்று (பிப்ரவரி 22) வெளியான முரசொலியில், உட்கட்சி தேர்தல் மேற்பார்வையாளர்கள் குழு பட்டியலில் நெல்லை மேற்கு மாவட்டத்துக்கு அய்யாதுரை பாண்டியன் பெயரையும் சேர்த்து அறிவித்து அவருக்குப் பரிசு கொடுத்துள்ளது திமுக தலைமை.

இது எப்படி இருக்கு?

**-ஆரா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *