மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

விஜய் மீது அழகிரிக்கு என்ன கோபம்: பொன்.ராதா

விஜய் மீது அழகிரிக்கு என்ன கோபம்: பொன்.ராதா

நடிகர் விஜய்யை காங்கிரஸ் கட்சிக்கு அழைத்தது தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார்.

விஜய் வீட்டில் நடந்த வருமான வரித் துறை சோதனையின்போது அவருக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்திருந்தார். ரஜினிக்கு சலுகை காட்டும் வருமான வரித் துறை விஜய்யை குறிவைத்து செயல்படுவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

சத்தியமூர்த்தி பவனில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது இதற்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி,தான் நியாயத்தின் குரலாகவே வெளிப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும், “விஜய் காங்கிரஸுக்கு வந்தால் மனப்பூர்வமாக ஏற்போம்” என்ற தகவலையும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் இன்று (பிப்ரவரி 22) செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம் என்று கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார். அவருக்கு நடிகர் விஜய் மீது ஏதோ கோபம் இருக்கிறது என்று நினைக்கிறேன். விஜய் நல்ல முறையில் இருந்துகொண்டிருக்கிறார். விஜய்யை தற்கொலைக்கு சமமான வி‌ஷயத்தை செய்ய அழகிரி தூண்டுகிறார்” என்று கிண்டலாக பதிலளித்தார்.

சிஏஏவுக்கு எதிராக பொதுமக்கள் தூண்டப்படுவதாகவும், அதற்கு திமுகவும், காங்கிரஸ் கட்சியும்தான் 100 சதவீதம் காரணம் என்று தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன், “சுதந்திரம் பெற்றபோதும் இந்த நாட்டில்தான் இருப்பேன் என்று வாழ்ந்து வரும் இஸ்லாமியர்கள் உள்பட எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை இந்த மண்ணை விட்டு அகற்ற மத்திய அரசு தயாராக இல்லை” என்று தெரிவித்தார்.

த.எழிலரசன்

சனி, 22 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon