மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

டிஜிட்டல் திண்ணை: பிகேவுக்கு போட்டியாக, எடப்பாடியின் டெமோ ஆரம்பம்!

டிஜிட்டல் திண்ணை: பிகேவுக்கு போட்டியாக, எடப்பாடியின் டெமோ ஆரம்பம்!

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது,

“அரசியல் கட்சிகள் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக முழு வீச்சில் தயாராகி வருகின்றன. அகில இந்திய அளவில் தேர்தல் உத்தி வகுப்பாளர்களின் முக்கியமானவராக கருதப்படும் பிரசாந்த் கிஷோருடன் திமுக ஒப்பந்தம் செய்து முதல் கட்ட வேலைகளைத் தொடங்கியிருக்கிறது. திமுக பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் செய்துகொண்டதை பல்வேறு தரப்பினரும் விமர்சித்தார்கள்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமானவர் என்று கருதப்படும் தலைமைச் செயலாளர் சண்முகம் ஒரு விழாவில் பேசும்போது, ‘அரசியல் கட்சிகள் இப்போது உத்தி வகுக்கும் நிறுவனங்களைத் தேடிச் செல்வது கவலைக்குரிய ஒன்று’ என்று பேசியிருந்தார். அண்மையில் நடந்த மாசெக்கள் கூட்டத்தில் கூட திமுக தலைவர் ஸ்டாலின், ‘பிரசாந்த் கிஷோர் வருகையால் மாவட்டச் செயலாளர்களுக்கு எந்த குறைச்சலும் இல்லை’ என்பதை தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்த நிலையில் அதிமுகவும் தேர்தல் உத்தி வகுப்பாளர்கள் பின்னால் செல்ல ஆரம்பித்திருக்கிறது. பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தில் இருந்து அண்மையில் விலகிய சுமார் இருபது முக்கிய புள்ளிகள் இணைந்து, ‘டெமோஸ் புராஜக்ட்’ என்ற அதேபோன்றதொரு அமைப்பை தொடங்கினார்கள். திமுகவில் பிரசாந்த் கிஷோர் வருகைக்கு முன்பாக இருந்த சுனிலுக்கும் இவர்களுக்கும் நல்ல தொடர்புண்டு. பிகேவிடம் இருந்து வெளியே வர வைத்து இவர்களை தனியாக இயங்க வைத்ததும் சுனில்தான் என்ற பேச்சும் உண்டு. இப்போது இந்த டெமோஸ் நிறுவனம் எடப்பாடியோடு கை கோர்த்துள்ளது.

தமிழக பட்ஜெட் பற்றி தனது வலைப் பக்கங்களில் விளம்பரம் செய்ய ஆரம்பித்த டெமோஸ், எடப்பாடியின் மூன்று ஆண்டு கால ஆட்சி முடிந்து நான்காம் ஆண்டு தொடங்குவது பற்றி விளம்பரம் செய்திருக்கிறது. அதுமட்டுமல்ல... குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில், ‘யாருக்கு இதனால் பாதிப்பு வரும் என்று சொல்லுங்கள்... சொல்லுங்கள்’என்று ஆவேசமாகக் கேட்டாரே...அந்த வீடியோவை ஏற்கனவே ’இபிஎஸ் 24 ஹவர்’ என்ற குரூப் பரப்பி வந்த நிலையில், டெமோஸ் அதைக் கையிலெடுத்து வெகு வேகமாக வைரல் ஆக்கிவிட்டிருக்கிறது.

சுனில் ஏற்கனவே ஸ்டாலினுடன் இருந்தவர். அவர் டெமோவுடன் ஓப்பனாக வெளியே வரவில்லை என்றாலும் அவரது பங்கும் உள்ளுக்குள் இருக்கிறது என்கிறார்கள். அதனால் திமுகவின் சில ரகசிய நடவடிக்கைகள் பற்றிய தகவல் அறிந்து அதற்கேற்றாற்போல் செயல்படவும் டெமோவுக்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறார்கள்.

இப்போது இந்த சமூக தளப் பணிகளை மட்டுமேசெய்து வரும் டெமோவுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியமான உத்தரவு, ‘எடப்பாடியை , எடப்பாடியின் ஆட்சியை மட்டுமே ப்ரமோட் செய்ய வேண்டும்’ என்பதுதான். ஓ.பன்னீர் என்பவர் எடப்பாடிக்கு உதவியாக அவர் பின்னால் இருப்பவர்தானே தவிர, அதிமுகவின் முதன்மை முகம் எடப்பாடி என்பதுதான் டெமோவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆணை. இதன்படியே டெமோவின் டெமோக்கள் தொடங்கியிருக்கின்றன.

இதுபற்றி அதிமுகவின் ஐடி விங்குக்குள் புகைச்சல்களும் கரைச்சல்களும் கிளம்பியிருக்கின்றன. ஏனெனில் ஐடி விங்குக்குள் ஏற்கனவே ஓ.பன்னீர் அணி, எடப்பாடி அணி என இரு அணிகள் இருக்கின்றன. டெமோவின் இந்த பணிகளால் அதிமுகவுக்குள் பன்னீர் அணியினர் முகம் சுளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனால் எந்த சலனமும் இல்லாமல் எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்துவது என்பதையே பிகேவின் முன்னாள் சீடர்கள் டெமோவில் செய்துகொண்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியை மட்டும் முன்னிறுத்தும் டெமோவால் அதிமுகவுக்குள் சலசலப்புகள் தொடங்கிவிட்டன” என்ற செய்திக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

சனி, 22 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon