மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

மோடி, அமித் ஷா குடியுரிமையை நிரூபிக்கட்டும்: சீமான்

மோடி, அமித் ஷா குடியுரிமையை நிரூபிக்கட்டும்: சீமான்

குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது பல்வேறு குழப்பங்களை விளைவிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த இஸ்லாமியர்கள் போராட்டத்தில் தடியடி நடந்ததைத் தொடர்ந்து, இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘சிஏஏவால் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று கூறுங்கள், நான் பதில் சொல்கிறேன்’ என ஆவேசமாகப் பதிலளித்தார்.

இந்த நிலையில் மதுரையில் நேற்று (பிப்ரவரி 21) செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏற்கவில்லை என்று 11 மாநிலங்களுக்கு மேல் சொல்லிவிட்டன. இது இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் மட்டுமல்ல, நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் எதிரானது. எது குடியுரிமைக்கான சான்றிதழ் என்றே இன்னும் வரையறுக்கப்படவில்லை.

அசாமில் ஒருவர் குடியுரிமையை நிரூபிக்கக் காண்பித்த 15 ஆவணங்களையும் நிராகரித்துவிட்டு பிறப்புச் சான்றிதழை கேட்டுள்ளார்கள். பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்வதற்கான சட்டமே 1969ஆம் ஆண்டுதான் கொண்டுவரப்பட்டது. எனக்கு பிறப்புச் சான்றிதழ் உள்ளது என வைத்துக்கொள்வோம். என்னுடைய தாய், தந்தைக்கு எப்படி பிறப்புச் சான்றிதழ் இருக்கும். அப்படியென்றால் நான் இந்தியாவின் குடிமகன், என்னுடைய தாயும் தந்தையும் குடிமக்கள் இல்லை. இது எவ்வளவு குழப்பத்தை விளைவிக்கிறது என்று பாருங்கள்” என்று கேள்வி எழுப்பினார்.

சிஏஏ பாதிப்பு என்று நிரூபிப்பவருக்கு 1 கோடி பரிசு என்று ஒருவர் அறிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு, “இந்த நோட்டீஸை ஒட்டிய நபர்தான் இச்சட்டத்தினால் முதலில் பாதிக்கப்படுவார். இந்தச் சட்டம் தூக்கியெறியப்பட வேண்டும்” என்று பதிலளித்தார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஆவணங்களை சமர்பிக்க மாட்டோம் என மற்ற கட்சிகள் முடிவெடுத்துள்ளதே என்ற கேள்விக்கு, “மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எங்களுடைய ஆவணங்களை அளிப்போம். இந்திய குடிமகன் என்று நிரூபிப்பதற்கான சான்றிதழை தரமாட்டோம். இது தெரியாமல்தான் எங்களை 72 ஆண்டுகள் ஆட்சி செய்தார்களா? அப்படி குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என்றால், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜககாரர்கள் அவர்களின் குடியுரிமையை நிரூபிக்கட்டும். அதன் பிறகு மக்கள் சமர்பிப்பது குறித்து பேசலாம்” என்று தெரிவித்தார்.

த.எழிலரசன்

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon