மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும்: திராவிடர் கழகம்!

சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும்:  திராவிடர் கழகம்!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென திராவிடர் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

திராவிடர் கழகத்தின் பொதுக் குழு கூட்டம் திருச்சி பெரியார் மாளிகை மணியம்மையார் நூற்றாண்டு நினைவு அரங்கத்தில் செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமையில் இன்று (பிப்ரவரி 21) நடைபெற்றது. அதில், தி.க தலைவர் கி.வீரமணி, துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் மற்றும் பொதுக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மறைந்த திராவிட இயக்க பற்றாளர்களுக்கு இரங்கல் தெரிவித்து முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மணியம்மையாருக்கு மார்ச் 10ஆம் தேதி நூற்றாண்டு விழா நடத்துவது எனவும், மே 16 ஆம் தேதி அரியலூரில் திராவிடர் கழக மாநில இளைஞரணி மாநாட்டை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், சென்னை மாநகரப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு என்ற பெயரால் மதவாத அணுகுமுறை கொண்டுவரப்படுவதாகவும் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை நிரந்தரமாக நீக்க வேண்டும் எனவும், நீட் தேர்வு விலக்கு மசோதாக்களை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிட தமிழக அரசை வலியுறுத்தியும், தேசிய கல்விக் கொள்கை வரைவை திரும்பப் பெற வேண்டுமெனவும், முன்னேறிய சமூகத்தினருக்கு வழங்கப்படும் 10 சதவிகித இடஒதுக்கீட்டை திரும்பப் பெற வேண்டுமெனவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென தெரிவித்து இயற்றப்பட்ட தீர்மானத்தில், “2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரின் கணக்குகள்தான் எடுக்கப்படும். பிற்படுத்தப் பட்டோரில் அடங்கியுள்ள சாதி வாரியான பட்டியல் எடுக்கப்பட மாட்டாது என்று ஒரு தகவல் வெளிவந்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் 75 விழுக் காட்டுக்கு மேலும் இருக்கக்கூடிய உண்மை நிலை வெளிச்சத்துக்கு வந்தால், 27 விழுக்காடுக்குப் பதிலாக அதிக விழுக்காட்டில் இடஒதுக்கீடு கேட்டு வலியுறுத்தும் நிலை பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் மூண்டு எழும் என்ற அச்சத்தின் காரணமாகத்தான், பிற்படுத்தப்பட்டோர் ஜாதிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள மறுக்கின்றனர் என்பதுதான் உண்மை.

ஜாதிவாரிப் பட்டியல் எடுக்கப்படும்போது, உயர் சாதியினரின் எண்ணிக்கையும் வெளிப்பட்டு, அவர்களின் எண்ணிக்கையைவிட பல மடங்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் ஆதிக்கம் செலுத்தும் உண்மை வெளிப்படும் என்பதால், சாதிவாரி கணக்கெடுப்பை ஆளும் வர்க்கம் -உயர்சாதி அதிகார வர்க்கம் தடுக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உரத்த குரல் கொடுத்து, ஜாதி வாரி கணக்கெடுப்பை எந்த காரணத்தை முன் னிட்டும் தவிர்க்கக் கூடாது; சாதிவாரிக் கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மத்திய அரசு இந்தப் பணியை மேற்கொள்ளாவிட்டால், ஒடிசா மாநில அரசைப் போல, தமிழக அரசும் சாதி வாரிக் கணக்கெடுப்பை மேற் கொள்ளவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும், பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் கோயில் கட்டப்பட்டிருப்பது சட்ட விரோதம் எனவும், இதனைத் தடுத்து நிறுத்திடவும், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் பதிவேடு ஆகியவற்றைக் கைவிட வேண்டும் என்றும், ஆன்லைன் ரம்மி எனப்படும் இணையவழி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பது உள்பட மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

த.எழிலரசன்

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon