மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

அன்பில் மகேஷுக்கு அருண் (நேரு) வைக்கும் செக்!

அன்பில் மகேஷுக்கு அருண் (நேரு) வைக்கும் செக்!

திமுகவின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த கே.என். நேரு, கடந்த ஜனவரி 26 ஆம் தேதி மாநில அளவில் தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து திருச்சி திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மகிழ்ந்தாலும், ‘இனி அடிக்கடி நேருவை திருச்சியில் பார்க்க முடியாதே’ என்று வருத்தப்பட்டனர். அந்த வருத்தத்தை சமூக தளங்களில் பலர் நேரடியாகவே பதிவு செய்தனர்.

நேருவின் பதவி உயர்வை அடுத்து திருச்சி திமுக மூன்றாக பிரிக்கப்பட்டு திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், திருச்சி மத்திய மாவட்ட கழக பொறுப்பாளராக வைரமணியும் நியமிக்கப்பட்டனர். திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் காடுவெட்டி தியாகராஜன் தொடர்கிறார்.

நேரு திருச்சியில் இருந்தவரை தினமும் கலைஞர் அறிவாலயம் வருவார், அல்லது அவரது தில்லை நகர் வீடு- அலுவலகத்தில் இருப்பார். காலை முதல் இரவு வரை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், மாற்றுக் கட்சியினர் என பல தரப்பட்டவர்களும் அவரைப் பார்க்க வந்து செல்வார்கள். நேரு சென்னை சென்றபிறகும் அவரது அலுவலகத்துக்கு கூட்டம் கூட்டமாய் தொண்டர்களும் நிர்வாகிகளும் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் திங்கள் முதல் வெள்ளிவரை சென்னையில் இருக்கும் நேரு வார இறுதி நாட்களில்தான் திருச்சிக்கு வந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது கூட தலைமைக் கழகத்தில் ஏதேனும் நிகழ்ச்சிகள் இருந்தால் திருச்சியில் தலையைக் காட்டிவிட்டு அடுத்த விமானம் பிடித்து சென்னை செல்ல வேண்டிய அவசியம் நேருவுக்கு ஏற்பட்டு விடுகிறது.

இதன்காரணமாக பலரும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக திடீரென நேருவின் மகனான அருண் நேரு தில்லை நகர் அலுவலகத்துக்கு வந்து சென்றுகொண்டிருக்கிறார். நேருவைப் போலவே ஆனால் அவருக்கே உரிய கூரிய மீசையில்லாமல் தோற்றமளிக்கும் அருண் நேருவை தில்லை நகர் அலுவலகத்தில் பார்த்ததும் தொண்டர்கள் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டார்கள். சின்னவரே சின்னவரே அன்று அவரைப் பார்க்க குவியத் தொடங்கிவிட்டனர்.

கேர் கல்லூரியின் நிர்வாகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் அருண் நேரு தனது தந்தையைப் பார்க்க வருகிறவர்களுக்கு பதில் சொல்வது மட்டுமல்ல... ‘என்ன நிகழ்ச்சினாலும் சொல்லுங்கண்ணே வந்துடறேன்’ என்று கூறுவது நிர்வாகிகளுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதுமட்டுமல்ல திருச்சி மாவட்டத்தில் கட்சியினர், பொதுமக்கள் வீட்டு நல்லது கெட்டதுகளிலும் கலந்துகொண்டு வருகிறார் அருண் நேரு. பிப்ரவரி 20 ஆம் தேதி திருச்சி உறையூர் காவல்காரன் தெருவில் சில வீடுகள் இடிந்துபோக, அங்கே சென்று வீடு இழந்தவர்களுக்கு தன் தந்தை நேரு சார்பில் அருண் நேரு நிதியுதவி வழங்கினார். இந்த பகுதி மத்திய மாவட்டத்துக்குள் வருகிறது. அருண் நேருவோடு மாவட்டப் பொறுப்பாளர் வைரமணியும், நகர செயலாளர் அன்பழகனும் சென்றனர். அவர்கள் பக்கத்தில் நிற்க அருண் நேருதான் நிதியுதவியை வழங்கினார்.

இதுகுறித்து திருச்சி திமுகவின் சில புள்ளிகளிடம் பேசினோம்.

“நேருவிடம் பத்திரமாக இருந்த திமுக அவர் சென்னை போனதும் என்னாகப் போகிறதோ என்று நினைத்திருந்தோம். ஆனால் இப்போது அந்த பயம் போய்விட்டது. அன்பில் மகேஷ் மாவட்டச் செயலாளராக ஆவதற்கு முன்பே அவரை வைத்து முக்குலத்தோர் லாபி ஒன்று திருச்சியில் மட்டுமல்ல திருச்சி தாண்டி தமிழகம் முழுவதும் நடந்துகொண்டிருந்தது. அவர் மாசெ ஆன பிறகும் அவரை சாதி வளையத்துக்குள் அடைக்க வைக்கும் சில முயற்சிகள் அவரது ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுபவர்களாலேயே நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்தான் திருச்சியில் என்றும் நேருதான் என்று சொல்லும்படி தனது மகனை களமிறக்கியிருக்கிறார் நேரு,. அன்பில் மகேஷ் தரப்புக்கு அருண் நேருவின் வரவு அதிர்ச்சி அளித்திருக்கிறது” என்று கூறுகிறார்கள்.

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon