மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

மோடியைப் பிடிக்கும்...ஆனால் இந்தியா: ட்ரம்ப்

மோடியைப் பிடிக்கும்...ஆனால் இந்தியா: ட்ரம்ப்

இந்தியாவுடன் பெரிய வர்த்தக ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக வரும் 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியா வருகை தருகிறார். டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்குகொள்கிறார். ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலையும் சுற்றிப் பார்க்கிறார். அதன்பிறகு அகமதாபாத் மோரோடோ மைதானத்தில் நடைபெறும் வணக்கம் ட்ரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இந்த நிலையில் கொலோராடா மாகாணத்தில் கீப் அமெரிக்கா கிரேட் என்னும் நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “நான் அடுத்த வாரம் இந்தியாவுக்கு செல்கிறேன். அப்போது இந்தியாவும் அமெரிக்காவும் ஒப்பந்தம் குறித்து விவாதிக்கவுள்ளோம்.

நான் பிரதமர் நரேந்திர மோடியை மிகவும் விரும்புகிறேன். ஆனால், நாங்கள் சிறிய வியாபாரம் ஒன்றைப் பேச வேண்டும். உலகின் மிக அதிகமான இறக்குமதி வரி விதிப்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்தியா நெருக்கடி தந்து வருகிறது. இருப்பினும் உலகின் மிகப்பெரிய மைதானத்தில் நான் பங்குபெறும் நிகழ்ச்சிக்கு 10 மில்லியன் மக்கள் வருவார்கள் என்று கேள்விப்படுகிறேன்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து லாஸ் வேகாஸில் நடந்த கைதிகளுக்கான பட்டமளிப்பு விழாவில் பேசிய ட்ரம்ப், “இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தங்கள் எட்டப்படலாம். சிறந்த ஒப்பந்தமாக அமையவில்லை எனில் அது மேலும் தாமதமாகலாம். ஆனால் நல்ல ஒப்பந்தங்களை மட்டும் நாங்கள் மேற்கொள்வோம். ஏனெனில் நாம் முதலிடம் வகிக்கிறோம். மக்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அமெரிக்காவை முதலிடத்தில் வைக்க விரும்புகிறோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்பின் வருகையையொட்டி அகமதாபாத்தில் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபரின் பாதுகாப்புப் படை அதிகாரிகள் அகமதாபாத்தில், ட்ரம்ப்பின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

த.எழிலரசன்

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon