மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 28 மே 2020

வேளாண் மண்டலம்-அமெரிக்க ஒப்பந்தம்: புதிய கேள்வி!

வேளாண் மண்டலம்-அமெரிக்க ஒப்பந்தம்: புதிய கேள்வி!

வேளாண் மண்டல சட்டம் தொடர்பாக வைகோ பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேம்படுத்தும் சட்டம் நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களும், கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சில வட்டாரங்கள் மட்டுமே வேளாண் மண்டலம் என்ற வரையறையில் கொண்டுவரப்பட்டுள்ளது. சட்டம் அமல்படுத்தும் தேதிக்கு முன்னர் இருக்கும் திட்டங்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேளாண் மண்டல சட்டம் தொடர்பாக இன்று (பிப்ரவரி 21) வைகோ பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

, “காவிரி டெல்டா பகுதிகளான திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் முழுவதும் இந்த சட்ட முன்வடிவில் இணைக்கப்படாததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை” என்று தெரிவித்த வைகோ,

“2018 அக்டோபர் 1 ஆம் தேதி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம், காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு வேதாந்தா குழுமம் மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுடன் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்து தமிழக அரசு திட்டவட்டமாக, தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்காதது ஏன்? அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்படாமல், வெறுமனே வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்று சட்டம் இயற்றுவதால் ஆகப்போவது என்ன?

வேளாண் சாராத தொழில்கள் தொடங்க முடியாது என்றுள்ள பட்டியலில் பெட்ரோலியம், பெட்ரோலிய ரசாயனம், சுத்திகரிப்புத் தொழில்கள் குறிப்பிடப்படவில்லையே அது ஏன்? கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 45 கிராமங்களில் 57500 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, அவற்றில் பெட்ரோலிய இரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் (Petrolium, Chemicals and Petrochemicals Investment Region -PCPIR) அமைப்பதற்கு 2017ஆம் ஆண்டு ஜூலை 19 இல் தமிழக அரசு பிறப்பித்த குறிப்பாணை (எண்.29) இரத்து செய்யப்படும் என்று முதல்வர் அறிவிக்காதது ஏன்?” என்று பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.

கடந்த ஆண்டு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமெரிக்கா சென்றிருந்தபோது கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலத்தில் முதலீடு செய்வதற்கு ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு வந்தாரே, அதை இரத்து செய்வோம் என்று அறிவிக்கத் தயாரா என்றும் கேட்டுள்ளார் வைகோ.

மேலும், “கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைவர் புரந்தண்ட் சட்டர்ஜி தமிழக முதல்வரைச் சந்தித்துவிட்டு, கடலூர் மாவட்டத்தில் பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலத்தில் 50 ஆயிரம் கோடி முதலீடு செய்யப் போகிறேம் என்று அறிவித்துவிட்டுச் சென்றாரே? அதனை தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி செய்தது மட்டுமல்ல, பெட்ரோலிய ரசாயன ஆலைகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று கூறி உள்ளாரே? அப்படியானால், கடலூர், நாகை மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்கள் வேளாண் பாதுகாப்பு மண்டலத்தின் கீழ் சேர்க்கப்படவில்லையா?” என்று அடுக்கடுக்கான வினாக்களை தொடுத்துள்ளார்.

மேலும், “விசுவரூபமெடுக்கும் இந்தக் கேள்விகளுக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்குமா? என்று காவிரிப் படுகை மாவட்ட மக்கள் கேட்கிறார்கள்.காவிரிப் படுகை மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களும், பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலிய இரசாயன ஆலைகள் உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக தடை செய்தால் மட்டுமே வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்று அறிவிப்பதும், சட்டம் இயற்றுவதும், செயல் வடிவம் பெறும். இல்லையேல், வெற்று ஆரவார அறிவிப்பாகப் போய்விடும்” என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

த.எழிலரசன்

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon