�கிருஷ்ணப்ரியாவை சந்தித்த செந்தில்பாலாஜி -திமுக, அமமுகவில் அதிர்வலைகள்!

politics

அமமுகவில் இருந்து கடந்த வருடம் வெளியேறி திமுகவில் இணைந்த, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப் பிரியாவை சந்தித்துப் பேசியுள்ளார் என்பதுதான் திமுக, அமமுக வட்டாரத்தில் இப்போது பேசப்படும் ஹாட் செய்தி.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமமுகவிலிருந்து விலகி 2018 டிசம்பர் மாதம் திமுகவில் இணைந்தார். அதிலிருந்து 42 ஆவது நாள் அவருக்கு கரூர் மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர்,அரவக்குறிச்சி இடைத் தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனார்.

மேலும், ஸ்டாலினை ஆழ்வார்ப்பேட்டை வீட்டிலேயே சந்திக்கும் அளவுக்கு குறுகிய காலத்திலேயே செல்வாக்குடன் வலம்வந்தார். ஆனால், அண்மையில் நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் திமுக பல இடங்களில் தோல்வியை சந்தித்தது. தான் அமமுகவில் இருந்து வந்ததால் திமுக நிர்வாகிகள் சரிவர ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கருதிய செந்தில் பாலாஜி, தனக்கு சாதகமாக பணியாற்ற அமமுகவில் தன்னோடு நெருக்கமாக இருந்தவர்களை திமுக அழைத்துவந்து இணைத்துவருகிறார்.

இந்த நிலையில்தான் அந்த திடீர் சந்திப்பு நடந்துள்ளது. இதுபற்றி அமமுக வட்டாரத்தில் நம்மிடம் சிலர்,

“ சில நாட்களுக்கு முன்பு செந்தில் பாலாஜி சென்னை தி.நகரிலுள்ள சசிகலா அண்ணன் மகள் கிருஷ்ணப் பிரியாவின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்த சந்திப்பின்போது இருவரும் அரசியல் விஷயங்கள் குறித்து பேசியுள்ளனர். சசிகலாவும், இளவரசியும் சிறையில் எப்படி இருக்கிறார்கள், அவர்களது உடல்நலன் எப்படி இருக்கிறது?, எப்போது விடுதலையாவார்கள் என்று கிருஷ்ணப் பிரியாவிடம் விசாரித்திருக்கிறார் செந்தில் பாலாஜி. அதற்கு, இருவரும் நன்றாக இருக்கிறார்கள், விரைவில் விடுதலையாகிவிடுவார்கள் என்று சொல்லியுள்ளார் கிருஷ்ணப் பிரியா.

பின்னர், இருவரின் பேச்சும் திமுகவை நோக்கி நகர்ந்துள்ளது. செந்தில் பாலாஜியிடம், திமுகவில் எப்படி இருக்கிறது என்று கேட்டுள்ளார் கிருஷ்ணப் பிரியா. அப்போது, திமுகவில் சேர்ந்ததற்குப் பிறகு தனக்கு ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகள், உள்ளாட்சித் தேர்தல் தோல்வி உள்ளிட்டவை குறித்து பகிர்ந்துகொண்டிருக்கிறார்” என்கிறார்கள்.

இந்தத் தகவலை தெரிந்துகொண்ட கரூர் மாவட்ட திமுகவிலுள்ள செந்தில் பாலாஜி எதிர்ப்பாளர்கள், ‘இன்னும் அமமுகவுடன் செந்தில் பாலாஜி தொடர்பில் இருக்கிறார்’ என்று தலைமைக்கு தகவல் அனுப்பி வருகின்றனர்.

இதுதொடர்பாக செந்தில் பாலாஜி வட்டாரத்தில் விசாரித்தால், ‘இது புதுசு இல்லையே. அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட சந்திப்பு’ என்று விளக்கம் சொல்கிறார்கள்.

**-மின்னம்பலம் டீம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *