மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ முழக்கம்: மாணவி கைது!

சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ முழக்கம்: மாணவி கைது!

குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பாகிஸ்தானின் குரலில் பேசிவருவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டி வரும் நிலையில், பெங்களூருவில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புக் கூட்டத்தில், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற முழக்கம் எழுப்பப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏ.ஐ.ஐ.எம். கட்சியின் தலைவரும், ஹைதராபாத் பாராளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் உவைசி கலந்து கொண்ட குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் நேற்று (பிப்ரவரி 20) பெங்களூரு சுதந்திரப் பூங்காவில் நடந்தது.

இதில் மேடையேறிய அமுல்யா என்ற ஒரு பெண் மைக்கைப் பிடித்து, ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்... பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று முழக்கமிட மேடையில் இருந்த உவைசி சட்டனெ எழுந்து அந்தப் பெண்ணை நோக்கிச் சென்றார். அவரது குரல், மேடையில் மற்ற நிர்வாகிகளின் குரல்களை பொருட்படுத்தாமல் அந்த மாணவி, ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று தொடர்ந்து முழங்கினார். உடனே அவர் தடுத்து நிறுத்தப்பட்டு, ‘ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்’ என்று முழங்கச் சொன்னார்கள். பின் அவர், ‘ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்...’ என்றும், மீண்டும் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்றும் சத்தமிட்டார். இந்தக் காட்சியை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதாக அவர் மீது பெங்களூரு போலீசார் தேச துரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரது பெயர் அமுல்யா லியோனா என்பதும் கல்லூரி மாணவி என்பதும் பின் தெரியவந்துள்ளது.

போலீசார் அம்மாணவியை பிடித்துச் சென்றபின் உரையாற்றிய உவைசி, “என் அன்பான நண்பர்களே, பெரியவர்களே, இங்கு சொல்லப்பட்ட வார்த்தைகளுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. இதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை - எனக்கும் எனது கட்சிக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. நாம் உயிருடன் இருக்கும் வரை பாரத் ஜிந்தாபாத்தின் கோஷத்தை எழுப்புவோம். எங்களுக்கு பாகிஸ்தானுடன் எந்த தொடர்பும் இல்லை, ஒருபோதும் இருக்காது”என்று பேசினார்.

ஆனால் கர்நாடக பாஜக தலைவர் நலின் குமார் கட்டீல் இது தொடர்பாக, “பெங்களூருவில் நடந்த சிஏஏ எதிர்ப்பு பேரணியில், அமுல்யா லியோனா என்ற இளம் பெண் பாகிஸ்தான் சார்பு கோஷங்களை எழுப்பி, தேச விரோதமாக நடந்து கொண்டார். காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் சிஏஏ எதிர்ப்பு இயக்கங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் கூட்டணி இருப்பது தெரியவந்துள்ளது. பாகிஸ்தானை ஆதரிப்பவர்கள் என்றென்றும் அங்கு செல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.

கர்நாடக மாநில காங்கிரஸும் இந்த சம்பவத்தை கண்டித்து சட்ட நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்திருக்கிறது.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய உவைசி, “ இத்தகைய நடத்தையை நான் கண்டிக்கிறேன், இப்படிப் பேச நினைப்பவர்கள் எங்களின் மேடையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது”என்று கூறியுள்ளார். அந்த மாணவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.

-வேந்தன்

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon