மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

டெல்டா வேளாண் மண்டலம்: சட்டமன்றத்தில் நடந்த விவாதம்!

டெல்டா வேளாண் மண்டலம்: சட்டமன்றத்தில் நடந்த விவாதம்!

காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேம்படுத்துதல் சட்டம் நேற்று (பிப்ரவரி 20) சட்டமன்றத்தில் முதல்வரால் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்கள் முழுவதும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளும் வேளாண் மண்டலத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 10.2.2020 அன்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதி இருக்கிறார்கள். அதன் மீது மாநில அரசு பெற்றிருக்கும் பதில் என்ன? காவிரி ஆற்றுப்படுகை மண்டலத்தில் உள்ள வேளாண் மண்டலங்களைப் பாதுகாக்கக் கொண்டுவந்திருக்கும் சட்ட முன்வடிவு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய 341க்கும் மேற்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மாநில அரசே அனுமதி வழங்கும் வகையில் அமைந்திருப்பது அதிர்ச்சி அடைய வைக்கிறது.

இதை நான் குறிப்பிட்டுச் சொல்வதற்குக் காரணம் என்னவென்றால், சட்ட முன்வடிவு பிரிவு 4 - 1இல் அட்டவணை 2இல் உள்ள புதிய திட்டங்கள் மற்றும் புதிய செயல்பாடுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் அடுத்துள்ள பிரிவு 4 - 2, 1 - ஏ பிரிவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்கள் பாதிக்கப்படக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பிரிவு 4 - 2, 1 - பியின் கீழ் உள்கட்டமைப்பு திட்டங்களான துறைமுகம், பைப் லைன், சாலை, தொலைத்தொடர்பு, எரிசக்தி, குடிநீர் வழங்கல் மற்றும் பிற பயன்பாட்டுக்கான (Other Utilities) திட்டங்களை இந்தச் சட்டம் கட்டுப்படுத்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் பிற பயன்பாடுகள் என்ற வகைக்குள், பெட்ரோல், கேஸ் எல்லாம் வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “சட்ட முன்வடிவின் நோக்கத்துக்கு எதிராகவே, இரு பிரிவுகளை இதில் ஏன் சேர்த்து இருக்கிறீர்கள்? தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் அரசு நியமிக்கும் உறுப்பினர்களுக்கு எல்லாம் மூன்று வருடங்கள் பதவிக் காலம் எனக் கூறிவிட்டு, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் ஒரு வருடம் பதவிக் காலம் என வரையறுக்கப்பட்டிருப்பதற்கு என்ன காரணம்?” என்று கேட்டவர்,

“இந்த மண்டலத்தில் உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு இந்த அமைப்பில் (Authority), ஏன் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அடங்கி உள்ள மாவட்டங்களின் பட்டியலைப் பார்த்தால், அதில் டெல்டா மாவட்டங்களான திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்கள் விடுபட்டிருக்கின்றன. இதற்கு என்ன காரணம்? விவசாயப் பிரதிநிதிகள் மூன்று பேர் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளீர்கள். அவர்கள் இந்த வேளாண் மண்டலத்திற்குள் இருக்கிறார்களா என்றும் கூறவில்லை” என்று பல சந்தேகங்களை எழுப்பினார்.

மேலும், “வேளாண் நிலங்களை மனைகளாகக் கூறு போட்டு விற்கிறார்கள். வேளாண் நிலங்களை ரியல் எஸ்டேட்டாக மாற்றக் கூடாது என்று தடை விதிக்கவில்லை. அதற்கு என்ன காரணம்? எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பு (Authority) ஒரு பரிந்துரை செய்யும் அமைப்பாக மட்டுமே இருக்கிறது. இதற்குத் தன்னாட்சி அதிகாரம் ஏதும் இல்லை.

2001இல் இதே போல் குஜராத் மாநிலத்தில் ஒரு குஜராத் கேஸ் ரெகுலேஷன் அதாரிட்டியை நியமித்தார்கள். மத்திய அரசின் பட்டியலில் உள்ள விஷயங்களில் அதிகாரம்கொண்ட குழுவை (Authority) அமைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று கூறி, ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, மாநில அரசு இயற்றிய அந்தச் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பைத் தமிழக அரசு கவனத்தில் கொண்டுள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை.

சட்ட வல்லுநர்களிடம் கலந்து பேசி சட்ட முன்வடிவைக் கொண்டு வருவோம் என்று இதே அவையில், முதலமைச்சர் உறுதி தந்தார். ஆனால் இந்தச் சட்ட முன்வடிவில் அப்படி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நடைமுறையில் உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்து உண்மையிலேயே, ஒரு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை உருவாக்கும் விதத்தில், சட்ட முன்வடிவுக் கொண்டுவருவதுதான் சிறப்பாக இருந்திட முடியும். ஆகவே விவசாயிகளுக்கு, முழுப் பாதுகாப்பு வழங்கக்கூடிய வகையில் சிறப்பான பாதுகாப்பு வேளாண் மண்டலம் சட்ட முன்வடிவுக் கொண்டு வர ஏதுவாக, இந்தச் சட்ட முன்வடிவைத் தேர்வுக் குழுவுக்கு (Select Committee) அனுப்ப வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், “ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் முக்கியமாக பாதிக்கப்படுவது கடலூர் மாவட்டம்தான். இன்னும் 45 ஆண்டுகளில் கடலின் நீர் மட்டம் உயர்ந்து டெல்டா விவசாய நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாக ஓர் ஆய்வறிக்கை சொல்கிறது. ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தினால் இன்னும் பாதிப்பு ஏற்படலாம் என்பதால்தான் கடலை ஒட்டியுள்ள டெல்டா மாவட்டங்களை இதில் இணைத்துள்ளோம்.

அரியலூர், கரூர் மாவட்டங்களில் விவசாயம் எந்த அளவு முக்கியமோ, அதே அளவு தொழிலும் முக்கியம். அரியலூரில் முழுக்க முழுக்க சிமென்ட் தொழிற்சாலைகள் உள்ளன. அதேபோல கனிம வளங்கள் நிறைந்த மாவட்டம். கரூரில் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் தொழிற்சாலைகள் உள்ளன. இந்தியாவின் இரண்டாவது பொருளாதார மண்டலமாகத் தமிழகம் உள்ளது. நமக்கு விவசாயம் ஒரு கண் என்றால் தொழில் வளர்ச்சி மற்றொரு கண். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும் என்றால் தொழிற்சாலைகள் வேண்டும். இப்படி ஒரு சட்டத்தை உருவாக்கும்போது தொழிற்சாலை நிறுவனங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது. நமது நோக்கம் விவசாயமும், விவசாய நிலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “காவிரி வேளாண் மண்டலத்தை திமுக வரவேற்கிறது என்பதில் எந்த சந்தேகமும் படவேண்டிய அவசியம் இல்லை. இதுகுறித்து மத்திய அரசிடம் வலியுறுத்த திமுக எம்.பி.க்கள் தயாராக இருக்கிறார்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதில் இருக்கக்கூடிய பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். முதலமைச்சர் சில விளக்கங்கள் தந்திருக்கிறார். இருந்தாலும் இதைத் தேர்வுக் குழுவுக்கு அனுப்பி அதில் விவாதிக்கப்பட்டு, அங்கு எழுப்பப்படும் சந்தேகங்களுக்குத் தீர்வு வந்தால்தான், இது முழுமையான அளவுக்கு வெற்றி பெறும் என்று நாங்கள் கருதுகிறோம். எனவே தற்போதைய சட்ட முன்வரைவைத் தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அரசையும், முதலமைச்சரையும் மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்றார்.

ஆனால், மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பாமல் நேரடியாக வாக்கெடுப்புக்கு விடுவதாக அறிவிக்கப்பட்டது. இதைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இந்தச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டிருந்தேன். திமுக ஆதரவளிக்காவிட்டாலும் தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த விவசாயிகளும் ஆதரவளிப்பார்கள். அந்த அடிப்படையில்தான் இந்தச் சட்ட முன்வடிவைத் தாக்கல் செய்தோம். இது விவசாயிகளை, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக்கூடிய சட்டம்” என்று தெரிவித்தார். பின்னர், அதிமுக உறுப்பினர்களின் ஆதரவோடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேம்படுத்துதல் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து சட்டமன்றக் கூட்டத் தொடரைத் தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் தள்ளிவைத்தார்.

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon