மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

அரசின் கடன்: துரைமுருகன் கவலை-தேற்றிய எடப்பாடி

அரசின் கடன்: துரைமுருகன் கவலை-தேற்றிய எடப்பாடி

தமிழக அரசின் கடன் தொகை தொடர்பாக துரைமுருகன் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை கடந்த 14ஆம் தேதி துணை முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில், தமிழக அரசின் வருவாய் ரூ.2,19,375 கோடியாகவும், செலவு 2,41,601 கோடியாக இருக்கிறது என்று தெரிவித்த பன்னீர்செல்வம், “22,226 கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறை உள்ளது” என்று கூறினார். மேலும், 2020-21ஆம் ஆண்டு நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சட்டமன்றத்தில் இன்று (பிப்ரவரி 19) பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், “ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் பஞ்சு மிட்டாய் போல உள்ளது. தமிழக அரசின் கடன் நான்கரை லட்சம் கோடி ரூபாயாக கொண்டு வந்திருக்கிறீர்களே...நாளை நாங்கள் ஆட்சிக்கு வரும்போது எங்கள் தலைவர் ஸ்டாலின் என்ன செய்வார் என கவலைப்படுகிறோம்” என்று பேசினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தற்போதுள்ள ரூபாய் 4 லட்சம் கோடி கடன் என்பது 10 ஆண்டுக்கு முன் இருந்த ரூபாய் 1 லட்சம் கோடிக்கு சமம். தமிழக அரசின் கடன் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். அப்படி ஒரு நிலை உங்களுக்கு வராது. அதனை நாங்களே பார்த்துக்கொள்வோம்” என்று பதிலளித்தார்.

த.எழிலரசன்

புதன், 19 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon