மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

மக்களிடம் என்ன சொல்வது? குடியரசுத் தலைவரிடம் எம்.பி.க்கள்!

மக்களிடம்  என்ன சொல்வது? குடியரசுத் தலைவரிடம்  எம்.பி.க்கள்!

சிஏஏவை திரும்பப் பெற வேண்டுமென திமுக கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் குடியரசுத் தலைவரை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.

திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர், என்.ஆர்.சி ஆகியவற்றுக்கு எதிராக நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கம் மூலம் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை 2.05 கோடி பொதுமக்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டது. அவற்றை கடந்த 16ஆம் தேதி சென்னையிலிருந்து திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் டெல்லிக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (பிப்ரவரி 19) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சந்தித்துப் பேசினர். அப்போது, வைகோ, திருமாவளவன், கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.ரங்கராஜன், சுப்பராயன், மாணிக்கம் தாகூர், சின்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கையெழுத்து விவரங்களை சமர்ப்பித்து, சிஏஏவை திரும்பப் பெற வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் மனுவும் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, “சிஏஏவுக்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்துக்களை குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் ஒப்படைத்தோம். அதுதொடர்பாக இன்று குடியரசுத் தலைவரை சந்தித்து பேசினோம். சுமார் 20 நிமிடங்கள் வரை நாங்கள் சொன்னதை உன்னிப்பாக கவனித்தார். சிஏஏ அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், சர்வதேச அமைப்புகளில் கடைபிடிக்கப்படும் நியாயங்களுக்கு எதிரானது என்றும் சொன்னோம். இதுபற்றி கலந்தாலோசித்து முடிவெடுக்கிறேன் என்று கூறினார். நாங்கள் மக்களிடம் என்ன சொல்வது என்று குடியரசுத் தலைவரிடம் கேட்டபோது, எல்லோருக்கும் என்னுடைய வணக்கத்தை சொல்லுங்கள் என்று தமிழில் கூறி அனுப்பினார். இதுதான் குடியரசுத் தலைவர் சந்திப்பில் நடந்தது” என்று தெரிவித்தார்.

மேலும், “இவை வெறும் கையெழுத்து அல்ல. தமிழக மக்களின் உணர்வு என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளதைக் குடியரசுத் தலைவரிடம் சொன்னோம். நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்...போராட்டங்கள் நடத்துவதற்கு உரிமை உள்ளது. அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துங்கள் என்று சொன்னார். போராட்டம் நடத்துவதை சரி என்று குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொள்கிறார்” என்றும் தெரிவித்தார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டியளித்தபோது, “கற்றறிந்தவர்கள் முதல் கழனியில் உழுபவர்கள் வரை தாங்களாகவே முன்வந்து கையெழுத்திட்டுள்ளனர். தமிழக மக்கள் விருப்பத்தை கையெழுத்து ஆக்கி உங்களிடம் தந்துள்ளோம். இதனை நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

த.எழிலரசன்

புதன், 19 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon