மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

ஆளுநரின் முடிவுக்கு காத்திருக்கிறோம்: முதல்வர்

ஆளுநரின் முடிவுக்கு காத்திருக்கிறோம்: முதல்வர்

7 பேர் விடுதலை தொடர்பாக சட்டமன்றத்தில் முதல்வர் பதிலளித்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும், ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் மீது ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுநர் முடிவெடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். இதுதொடர்பாக ஆளுநரிடம் பேசி என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பதை தெரிவிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. பட்ஜெட் மீதான விவாதத்தின் மூன்றாவது நாளான இன்று (பிப்ரவரி 19) பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், “7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது” என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக பதிலளித்த சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை விவகாரத்தில் இனி ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும். அமைச்சரவை முடிவு குறித்து ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் அதிகாரத்தில் தமிழக அரசு தலையிட முடியாது” என்று பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார். அந்த முடிவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

தர்மபுரி பேருந்து எரிப்பு சம்பவ குற்றவாளிகள் விரைவில் விடுவிக்கப்பட்டது தொடர்பான துரைமுருகனின் கேள்விக்கு, “3 மாணவிகளை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்கள் அந்த சம்பவத்தை செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது” என்று சி.வி.சண்முகம் விளக்கம் அளித்தார்.

த.எழிலரசன்

புதன், 19 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon