மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமானவர் கண்காணிப்பு அதிகாரியா? கனிமொழி

துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமானவர் கண்காணிப்பு அதிகாரியா? கனிமொழி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமானவர் சிஏஏ போராட்டக் கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர், என்.ஆர்.சி ஆகியவற்றுக்கு எதிராக சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தீவிரமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் போராட்டங்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து டிஜிபி, சென்னை மாநகர ஆணையருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களைக் கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஜி.ஸ்டாலின், தேனி மாவட்டத்துக்கு பாஸ்கரன், தூத்துக்குடிக்கு மகேந்திரன், மதுரைக்கு அபய்குமார் சிங், நெல்லை மாவட்டத்துக்கு மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தூத்துக்குடிக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டவருக்கு அந்த தொகுதி மக்களவை உறுப்பினர் கனிமொழி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று (பிப்ரவரி 19) அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ தமிழகத்தில் சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க டிஜிபி தூத்துக்குடிக்கு நியமித்துள்ள மகேந்திரனின் மேற்பார்வையில்தான் ஸ்டெர்லைட் போராட்டங்களின்போது 14பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவரை நியமித்தன் மூலம் தமிழக அரசு சிஏஏவுக்கு எதிராக போராடுபவர்களுக்கு என்ன செய்தியை உணர்த்தவிரும்புகிறது” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

த.எழிலரசன்

புதன், 19 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon