சிஏஏ- சட்டமன்ற முற்றுகை போராட்டம்: திணறிய சென்னை!

politics

சிஏஏவுக்கு எதிரான சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என இஸ்லாமியர்கள் கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர். இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையிலும், சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்காக இன்று (பிப்ரவரி 19) காலை முதலே சேப்பாக்கம் வாலஜா சாலையில் இஸ்லாமிய கூட்டமைப்பு, அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் குவியத் தொடங்கினர்.

சரியாக காலை 11 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் இருந்து பேரணி தொடங்கியது. பேரணியில் தேசியக் கொடியோடு, ‘நோ சிஏஏ’, ‘நோ என்பிசிர்’, ‘நோ என்ஆர்சி’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்திச் சென்றனர். பேரணியில், ‘பாசிசமே வெளியேறு’, ‘ஆர்எஸ்எஸ் அமைப்பே வெளியேறு’, ஆகிய முழக்கங்களும் எழுப்பப்பட்டன. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் லாரியில் மேடை அமைக்கப்பட்டு, அரசியல் கட்சித் தலைவர்கள் பேசிவருகின்றனர்.

போராட்டம் நடைபெறும் பகுதிகளில் காவல் துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை அண்ணாசாலை, வாலாஜா சாலை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை உள்ளிட்ட மூன்று இடங்களில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தடையை மீறி போராட்டம் நடைபெறுவதால் ட்ரோன் உள்ளிட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுபோலவே தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக பேரணியாகச் சென்றனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சுமார் 7 ஆயிரம் பேர் வரை பேரணியாகச் சென்றுள்ளனர். சேலத்தில் கலெக்டர் அலுவலகத்தின் கேட் வரை போராட்டக்காரர்கள் சென்றுவிட்டனர். அங்குதான் பேரி கார்டு அமைத்து போராட்டக்காரர்களை காவல் துறையினர் பாதியிலேயே தடுத்தனர். ஆனாலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டங்களை தொடர்கின்றனர். மேலும், எதிர்பார்த்த எண்ணிக்கையை விட அதிக அளவில் மக்கள் கூடியதால் அவர்களை கைது செய்தால் எங்கு தங்க வைப்பது என காவல் துறையினர் குழம்பியுள்ளார்.

**த.எழிலரசன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *