மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 4 ஜுன் 2020

விவசாயிகளுக்கு நகைக் கடன் வழங்கப்படுமா?

விவசாயிகளுக்கு நகைக் கடன் வழங்கப்படுமா?

உண்மையான விவசாயிகளுக்குக் கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் மார்ச் மாதத்துடன் நகைக் கடன்கள் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்ற அண்மையில் செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக சட்டமன்றத்தில் நேற்று (பிப்ரவரி 18) பேசிய திமுக கொறடா அர.சக்கரபாணி, “தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் 3 லட்சம் ரூபாய் வரை விவசாயிகளுக்கு நகைக் கடன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், மத்திய அரசு வரும் மார்ச் மாதம் முதல் நகைக்கடன் சட்டத் திருத்தம் கொண்டுவரவுள்ளது. இந்தச் சட்டத்தினால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். மேலும், சிறப்பாகச் செயல்படும் தொடக்க வேளாண்மை வங்கிகள் நலிவுற்றுப் போகும்” என்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, “வணிக வங்கிகளில் விவசாயத்துக்கு நகைக் கடன் என்று தவறாகக் கடன் கொடுப்பதைத் தடுக்கவே மத்திய அரசு அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் உண்மையான விவசாயிகளுக்குக் கடன் இல்லை என்ற நிலை வராது” என்று தெரிவித்தார்.

மேலும், “தமிழகத்தில் 4,449 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. விவசாயிகளுக்கு 4,432 கோடி ரூபாய் வரை கடன் கொடுத்து சாதனை புரிந்துள்ளோம். மேலும், விவசாயிகளுக்கு 11,000 கோடி வரை வட்டியில்லா பயிர்க் கடன்கள் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

இந்தக் கடன்கள் உரிய முறையில் உரிய விவசாயிகளுக்குக் கிடைக்கும். பணமதிப்பழிப்பு போன்ற இக்கட்டான சூழ்நிலைகளின்போது விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கூட்டுறவுச் சங்கங்கள் சிறப்பாகச் செயல்பட்டன. ஆகவே, தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லாத வகையில் உண்மையான விவசாயிகளுக்குத் தொடர்ந்து நகைக் கடன் வழங்கப்படும்” என்றும் பதிலளித்தார்.

-த.எழிலரசன்

புதன், 19 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon