மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

முரசொலி: பட்டியலினத்தோர் ஆணையத் தலைவருக்கு உத்தரவு!

முரசொலி: பட்டியலினத்தோர் ஆணையத் தலைவருக்கு உத்தரவு!

முரசொலி வழக்கில் தேசிய பட்டியலினத்தோர் ஆணையத் தலைவர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது. முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டினார். இதன் தொடர்ச்சியாக முரசொலி அலுவலக நிலம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் பாஜக மாநிலச் செயலாளர் சீனிவாசன் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதில் முரசொலி அறக்கட்டளை அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இதனிடையே பட்டியலினத்தோர் ஆணைய விசாரணைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் முரசொலி அறக்கட்டளை வழக்கு தொடர்ந்தது. மேலும், பட்டியலினத்தோர் ஆணையத்தின் தலைவரை வழக்கில் இணைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நேற்று (பிப்ரவரி 18) விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், “தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் பாஜகவின் நிர்வாகியாக இருந்துள்ளார். ஆகவே, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முருகன் விசாரணை மேற்கொள்வார்” என்று வாதிட்டார். இதைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், வழக்கில் இணைப்பது தொடர்பாக தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தின் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

-த.எழிலரசன்

புதன், 19 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon