மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

மேலவளவு வழக்கு: 13 பேருக்கும் நிபந்தனைகள் தளர்வு!

மேலவளவு வழக்கு: 13 பேருக்கும் நிபந்தனைகள் தளர்வு!

மேலவளவு வழக்கில் முன்விடுதலையான 13 பேருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

மேலவளவு ஊராட்சித் தலைவரான முருகேசன் உள்ளிட்ட 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 13 பேர், எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் ரத்தினம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது முன்விடுதலையான 13 பேரும் மேலவளவுக்குள் நுழையத் தடை விதித்த நீதிபதிகள், “வழக்கு முடியும் வரை அனைவரும் வேலூரில் தங்கியிருப்பதை வேலூர், மதுரை மாவட்ட கண்காணிப்பாளர்கள் உறுதிசெய்ய வேண்டும். 13 பேரும் முதல் மற்றும் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமைகளில் வேலூர் எஸ்.பி முன்பு ஆஜராக வேண்டும்” என்பது உள்பட பல நிபந்தனைகளை விதித்திருந்தனர்.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேலூரில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டுமென 13 பேரின் தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு முன்பு இன்று (பிப்ரவரி 18) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை தாக்கல் செய்த மனுதாரர் தொடர்ந்து ஆஜராகவில்லை என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், “வழக்கு முடியும் வரை 13 பேரும் ஊருக்குள் நுழையக்கூடாது என்றும், வேலூரில் தங்கி இருக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவுகள் விலக்கிக்கொள்ளப்படுகிறது” என உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை வரும் மார்ச் 16ஆம் தேதிக்கும் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

த.எழிலரசன்

செவ்வாய், 18 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon