மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

பெண்கள் வார்டில் ஆண் வெற்றி!

பெண்கள் வார்டில் ஆண் வெற்றி!

பெண்கள் வார்டில் ஆண் ஒருவர் வெற்றி பெற்றது செல்லாது என்று மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவுக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று (பிப்ரவரி 18) இடைக்காலத் தடை விதித்துள்ளது.

3 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு குளறுபடிகள் நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதனால் ஒரு சில இடங்களில் வெற்றி செல்லாது என்ற அறிவிப்பும் , பதவி ஏற்புக்குத் தடை விதித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாகச் சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்துத் தலைவர் பதவி ஏற்கத் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கரூரில் பெண்கள் வார்டில் வெற்றி பெற்ற ஆண் வேட்பாளரின் வெற்றி செல்லாது என்ற மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக கரூர் மாவட்டம் மதுகரையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், கரூர் சித்தலாவாய் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இதில் 1,3,4,6,9 ஆகிய வார்டுகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள வார்டுகள் பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டன,

இதில் 6ஆவது வார்டில் போட்டியின்றி தேர்வு பெற்று, மறைமுகத் தேர்தலில் ஊராட்சித் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டேன். துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற நிலையில், 6ஆவது வார்டு பெண்களுக்கானது என்று கூறி அங்கு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதும், துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதும் செல்லாது என்று மாவட்ட ஆட்சியர் பிப்ரவரி 6ஆம் தேதி உத்தரவிட்டார். உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்வதற்கு அவருக்கு உரிமை கிடையாது.

எனவே அவரது உத்தரவை ரத்து செய்வதோடு, அந்த உத்தரவைச் செயல்படுத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும். 6ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கும், ஊராட்சித் துணைத் தலைவர் பதவிக்கும் தடை விதிக்க வேண்டும். இழப்பீடாக எனக்கு ரூ.10 லட்சம் கொடுக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு இன்று (பிப்ரவரி 18) நீதிபதிகள் டி.ராஜா, பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வேட்பாளர் மனுத் தாக்கல் செய்து, அவரது வேட்புமனு ஏற்கப்பட்டு, வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்று, மறைமுகத் தேர்தலில் ஊராட்சித் துணைத் தலைவர் தேர்தலிலும் வெற்றி பெறும் வரை தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருந்தது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதுதொடர்பாக 4 வாரத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வெற்றி பெற்றது செல்லாது என்று மாவட்ட தேர்தல் அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.

-கவிபிரியா

செவ்வாய், 18 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon