மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்குத் தடை!

சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்குத் தடை!

சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சிஏஏவுக்கு எதிராகச் சென்னை வண்ணாரப்பேட்டையில் 5 நாட்களாகத் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இஸ்லாமிய கூட்டமைப்புகள் சார்பில் பிப்ரவரி 19ஆம் தேதி சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து இந்திய மக்கள் மன்றத் தலைவரான வாராகி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்தது. அதோடு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதனை காவல்துறை பார்த்துக்கொள்ளும் என்று தெரிவித்தது,

எனவே திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அனுமதியுடன் மாலை 5.30 மணியளவில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை சார்பில், வண்ணாரப்பேட்டை போராட்டம் தொடங்கியதிலிருந்து இதுவரை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் 12 வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. பிப்ரவரி 12ஆம் தேதியே சென்னையில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. சென்னையைப் பொறுத்தவரை ஏற்கனவே அனுமதி பெற்று போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு எந்த தடையும் கிடையாது. இஸ்லாமிய கூட்டமைப்புகள் சார்பில் நேற்றுதான் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. போராட்டம் நடத்த வேண்டும் என்றால் 5 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறையை அவர்கள் பின்பற்றவில்லை. எனவே அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 5 நாட்கள் முன் விண்ணப்பிக்கும் நடைமுறையைப் பின்பற்றவில்லை, அதனால் போராட்டத்துக்கு அனுமதியில்லை என்ற காவல்துறையின் இடைக்கால கோரிக்கையை ஏற்று, நாளை இஸ்லாமிய கூட்டமைப்புகள் அரசியல் கட்சிகள் சார்பில் திட்டமிட்ட சட்டமன்ற முற்றுகை போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதித்தது.

மார்ச் 11ஆம் தேதி வரை போராட்டத்துக்குத் தடை விதித்துள்ள நீதிமன்றம், போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இம்மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள், தமிழக டிஜிபி, காவல் ஆணையர், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர், காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

-கவிபிரியா

செவ்வாய், 18 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon