மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

சோனியா, ராகுல் மன்னித்துவிட்டனர்: எழுவர் விடுதலையில் காங்கிரஸ்!

சோனியா, ராகுல் மன்னித்துவிட்டனர்: எழுவர் விடுதலையில் காங்கிரஸ்!

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் அரசு தன்னுடைய கடமையைச் செய்ய வேண்டுமென காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 28 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் சிறையில் இருந்து வருகிறார்கள். ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் மீது ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுநர் முடிவெடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். இதுதொடர்பாக ஆளுநரிடம் பேசி என்ன முடிவு என்பதைத் தெரிவிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் நேற்று (பிப்ரவரி 17) காங்கிரஸ் சார்பில் பேசிய விஜயதாரணி, “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தின்போது 18 பேர் உயிரிழந்தனர். என்னுடைய தாயார் உட்பட பலர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அரசு விளக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்துத் தர வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும், “ராஜீவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளாகச் சிறையில் இருந்துவரும் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கூட அவர்களை மன்னித்துவிட்டனர். சட்டத்தின் அடிப்படையில் அவர்களை விடுவிக்க வேண்டும் என்றால் விடுவித்துக் கொள்ளலாம் என்ற நிலைக்கு அனைத்துத் தரப்பினரும் வந்துவிட்டோம். ஆகவே, இந்த விவகாரத்தில் அரசு தன்னுடைய கடமையைச் செய்ய வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

செவ்வாய், 18 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon