மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

தமிழகத்துக்கு வரும் ராகுல்

 தமிழகத்துக்கு வரும் ராகுல்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கடந்த வாரம் டெல்லி சென்று வந்தார். சென்னை வந்ததும், பிரதேச காங்கிரஸ் கமிட்டி எனப்படும் பிசிசி உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார்.

பிப்ரவரி 12 ஆம் தேதி கே.எஸ். அழகிரி எழுதிய கடிதம் இன்று (பிப்ரவரி 18) அனைத்து பிசிசி உறுப்பினர்களுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது. ஆக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட கடிதத்தை டெல்லி பயணத்துக்குப் பின் உறுதிப்படுத்திக் கொண்டு பிசிசி உறுப்பினர்களுக்கு அனுப்பியிருக்கிறார் அழகிரி.

அந்தக் கடிதத்தில், ‘ராகுல் காந்தி விரைவில் தமிழகத்துக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்திருக்கிறார் அழகிரி.

“நம் பாசத்துக்குரிய இளந்தலைவர் ராகுல் காந்தி இந்திய நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்று பிரகடனம் செய்யப்பட்டு, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 39 தொகுதிகளில் போட்டியிட்டு 38 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தோம். பாஜக,அதிமுக எதிர்ப்பை தமிழக மக்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள்.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழகம் அணி திரண்டு எதிர்த்ததைப் போல, இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய எதிர்ப்பை பாஜக சந்தித்திருக்காது.

இச்சூழலில் நமது காங்கிரஸ் இயக்கத்தை தமிழகத்தில் மேலும் வலிமைப்படுத்துவதற்கு ஓர் அரிய வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது. இந்திய மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், வகுப்புவாத சக்திகளை தேசிய அளவில் வீழ்த்துகிற ஆற்றலும் வல்லமையும் மிக்க நமது தலைவர் ராகுல் காந்தி அவர்கள், வருகிற மார்ச் முதல் வாரத்தில் தமிழகம் வருகை தர இருக்கிறார். அதற்கான ஒப்புதல் கிடைத்திருக்கிறது” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் அழகிரி, அதோடு இன்னொரு வேண்டுகோளையும் கட்சியினருக்கு முன் வைத்திருக்கிறார்.

அதாவது ராகுல் காந்தியின் தமிழக நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்திட, ‘நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்... நிதி குறைந்தவர் காசுகள் தாரீர், அதுவமற்றோர் வாய்ச்சொல் அருளீர், ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்’ என்னும் பாரதியின் வரிகளுக்கு ஏற்ப அனைத்து தரப்பினரும் தங்கள் ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தன் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தக் கடிதம் பற்றி காங்கிரஸ் வட்டாரத்தில் பேசியபோது, “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கான எதிர்ப்பு இந்திய அளவில் இன்று தமிழ்நாட்டில்தான் வீரியமாக அறவழியிலே நடக்கிறது. தமிழ்நாட்டில் தினம் தினம் நடக்கும் போராட்டங்கள் பற்றிய குறிப்பு ஐபி வழியாக மத்திய அரசை சென்றடைந்திருக்கிறது.தமிழக போராட்டங்களின் வீரியம் பற்றி அறிந்த ராகுல் காந்தி தமிழகத்துக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார். அதன் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியும் ராகுல் காந்தியிடம், ‘தேர்தலின் போது மட்டும் தமிழகத்துக்கு வருகிறீர்கள் என்ற எண்ணம் இருக்கிறது. அதை மாற்ற இதுபோன்ற நேரங்களிலும் நீங்கள் தமிழகத்துக்கு சுற்றுப் பயணம் வரவேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். எனவே தமிழக பயணத்துக்கு ராகுல் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இந்தக் கடிதம் சொல்லும் இரண்டாவது சங்கதி... சிதம்பரத்தின் பின்னால் நான் இல்லை என்று அழகிரி சொல்லியிருக்கிறார். ஏனெனில் சிதம்பரத்தின் நிழலில் இந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால் செலவுகளை சிதம்பரம் பார்த்துக் கொள்வார். இப்போது அதற்கு வாய்ப்பு இல்லாததால்தான் நிதியுதவி பற்றியும் வேண்டுகோள் வைத்திருக்கிறார் அழகிரி.

எது எப்படி இருந்தாலும் தேர்தல் அல்லாத நேரத்தில் ராகுல் காந்தி தமிழகத்துக்கு பயணம் மேற்கொண்டால் அது காங்கிரஸுக்கு நல்ல உற்சாகமாக இருக்கும். ராகுல் காந்தி வரும் நாளை எதிர்பார்க்கிறோம்” என்கிறார்கள்.

-ஆரா

செவ்வாய், 18 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon