மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

அவதூறு வழக்கை ரத்துசெய்யுங்கள்: ஸ்டாலின் வழக்கு!

அவதூறு வழக்கை ரத்துசெய்யுங்கள்: ஸ்டாலின் வழக்கு!

தன் மீதான அவதூறு வழக்கை ரத்துசெய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மனுதாக்கல் செய்துள்ளார்.

சென்னை மாநகராட்சி ஒப்பந்தப் பணிகளில் ஆற்று மணலுக்குப் பதில் எம்.சாண்ட் பயன்படுத்தியதில் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக கடந்த டிசம்பர் மாதம் குற்றம்சாட்டிய திமுக தலைவர் ஸ்டாலின், “இதுதொடர்பாக லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத் துறை தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

இதுதொடர்பாக வேலுமணி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதுபோல குடியுரிமை திருத்தச் சட்டம், தமிழகத்திற்கு நல்லாட்சி விருது தந்ததை விமர்சித்தது என மேலும் இரண்டு வழக்குகள் ஸ்டாலின் மீது தொடரப்பட்டுள்ளன. வேலுமணி தொடர்ந்த வழக்கில் வரும் 24ஆம் தேதி ஆஜராக வேண்டும் என ஸ்டாலினுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மற்ற வழக்குகளில் மார்ச் 3ஆம் தேதி ஆஜராக வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தன் மீதான அவதூறு வழக்கை ரத்துசெய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், “மாநகராட்சி டெண்டர்களில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அறப்போர் இயக்கம் பல தகவல்களை வெளியிட்டுள்ளது. ஆற்றுமணலுக்கு பதிலாக எம் சாண்ட் பயன்படுத்தி அரசு டெண்டர்களில் ரூ. 1000 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகின. அதனடிப்படையில் எதிர்க்கட்சி தலைவர் என்னும் முறையில் ஊழல் நடந்திருப்பது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக அறிக்கை வெளியிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “அமைச்சர் வேலுமணிக்கு எதிரான மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கை திசை திருப்பும் நோக்கிலேயே என் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே அமைச்சர் வேலுமணி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும். பிப்ரவரி 24ம் தேதி ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

த.எழிலரசன்

செவ்வாய், 18 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon