மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

முதல்வராக நீடித்ததே சாதனைதான்: கே.எஸ்.அழகிரி

முதல்வராக நீடித்ததே சாதனைதான்: கே.எஸ்.அழகிரி

எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார் கே.எஸ்.அழகிரி

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி பதவியேற்றார். அவர் முதல்வராகப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து கடந்த 16ஆம் தேதி நான்காம் ஆண்டில் காலடி எடுத்துவைத்தார். அவருக்கு ராமதாஸ், விஜயகாந்த், வாசன், சரத்குமார் உள்ளிட்ட அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைக்கின்றன.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (பிப்ரவரி 18) வெளியிட்ட அறிக்கையில், “கடந்த மூன்றாண்டுகளில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக நீடித்ததே மிகப்பெரிய சாதனை என்று பேசப்படுகிறது. ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிற ஒருவர் பதவியில் நீடிப்பது என்பது பெரிய அதிசயமல்ல. ஆட்சி கவிழ்ந்து தேர்தல் நடந்தால் வெற்றி பெற முடியாது என்பதால் அ.தி.மு.க. ஒன்றுபட்ட சக்தியாக இருந்து வருகிறது” என்று விமர்சித்துள்ளார்.

கடந்த மூன்றாண்டு காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசின் சாதனைகளை ஆய்வு செய்கிற போது, பல கசப்பான அனுபவங்கள் ஏற்படுகிறதென குறிப்பிடும் கே.எஸ்.அழகிரி, “தமிழகத்தில் நீட் தேர்வை நுழைய விட மாட்டோம் என்று சொன்னவர்கள், மத்திய பா.ஜ.க. அரசின் நீட் தேர்வு திணிப்பை 2016 முதல் ஏற்றுக் கொண்டு அமல்படுத்தி வருகிறார்கள். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அறிவித்தபடி முதலீடுகள் வந்ததா ? தொழில்கள் தொடங்கப்பட்டதா ? வேலை வாய்ப்புகள் பெருகியதா ? ஆனால், அறிவிக்கப்பட்ட முதலீட்டில் 50 சதவீதம் கூட முதலீடு செய்யப்படவில்லை என்கிற அதிர்ச்சி தகவல் வெளிவந்திருக்கிறது. இதன்மூலம் வேலை வாய்ப்புகள் உருவாக்குவதில் தமிழக அரசு முழு தோல்வியடைந்திருக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் 14 துப்புரவு பணிகளுக்காக 4600 மனுக்கள் வந்துள்ளன. இதில் பொறியியல் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் மற்றும் பல தகுதிமிக்க இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதுதான் எடப்பாடி ஆட்சியின் முத்திரைப் பதித்த மூன்றாம் ஆண்டு முதலிடத்திற்கான சான்றா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், “ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை, உதய் மின் திட்டம், ரயில்வே தபால் துறை தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு, புதிய கல்விக் கொள்கை திணிப்பு, முத்தலாக் தடை மசோதாவுக்கு ஆதரவு, விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலை, சிவகாசி பட்டாசுக்கு தடை, கரும்பு சாகுபடி குறைப்பு, குடியுரிமை சட்டத் திருத்த ஆதரவு என பல்வேறு நிலைகளில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது” எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், “எடப்பாடி அரசின் மூன்றாண்டு சாதனை என்று சொல்வதை விட, கடும் சோதனைகள் நிறைந்தது என்றே சொல்ல வேண்டும். எனவே, தமிழக மக்கள் மிகுந்த வேதனையிலும், துயரத்திலும் வாழ்ந்து வருகிறார்கள். எப்பொழுது அடுத்த பொதுத் தேர்தல் வரும், அப்போது எப்படி அ.தி.மு.க. ஆட்சியை தூக்கி எரிகிற வகையில் வாக்குகளை அளிக்கலாம் என மக்கள் தயாராக இருக்கிறார்கள். இதற்குக் காரணம் பா.ஜ.க.வின் எடுபிடி அரசாக, தமிழக மக்களை வஞ்சிக்கிற அரசாக எடப்பாடி அரசு விளங்கி வருகிறது. சாதனைகள் அறிவிப்பாக இருக்கிறதே தவிர, இதனால் மக்களுக்கு அ.தி.மு.க. அரசால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதை எவரும் மறுக்க முடியாது” என்றும் தனது அறிக்கையில் கூறியுள்ளார் அழகிரி.

த.எழிலரசன்

செவ்வாய், 18 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon