மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

மக்கள் குடிக்கிறார்கள், மது வருவாய் அதிகரிக்கிறது: தங்கமணி

மக்கள் குடிக்கிறார்கள், மது வருவாய் அதிகரிக்கிறது: தங்கமணி

மக்கள் குடிப்பதால் டாஸ்மாக் வருவாய் அதிகரித்திருப்பதாக அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.

சட்டமன்றத்தில் இன்று (பிப்ரவரி 18) பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ், “டாஸ்மாக் மூலமாக 30,000 கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதாக சொல்கிறார்கள். மதுவின் மூலமாக வரும் வருவாய் நல்லதல்ல. அதுபோலவே அதிமுகவின் தேர்தல் அறிக்கையில், மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளீர்கள். அது எப்போது அமல்படுத்தப்படும். அரசு மது வருவாயை நம்பியுள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் தங்கமணி, “திமுகதான் ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டுவரப்படும் எனக் கூறியது. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்றுதான் நாங்கள் கூறினோம். அதன்படி, தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது டாஸ்மாக் திறப்பது இரண்டு மணி நேரம் குறைக்கப்பட்டது. மதுக்கடைகளும் குறைக்கப்பட்டன.

மதுவிலை உயர்வால் தான் அரசுக்கு வருமானம் உயர்கிறதே தவிர மதுக் கடைகள் அதிகரிக்கப்படவில்லை. மக்கள் குடிக்கிறார்கள். அதனால்தான் மது விற்பனையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதற்கு அரசு என்ன செய்ய முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “திமுக ஆட்சியில் ஒன்றரை லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடப்பட்டது. அப்போது, மது விற்பனை சுமார் 16,000 கோடி வரை இருந்தது. இப்போது பட்ஜெட் 2.30 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது. அதனால் மது விற்பனையும் அதிகரித்துவிட்டது” என்று தெரிவித்தார்.

த.எழிலரசன்

செவ்வாய், 18 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon