மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

மாஃபா பாண்டியராஜன் மீது உரிமை மீறல் பிரச்சினை: திமுக வெளிநடப்பு!

மாஃபா பாண்டியராஜன் மீது உரிமை மீறல் பிரச்சினை: திமுக வெளிநடப்பு!

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் இரண்டாவது நாளாக இன்று (பிப்ரவரி 18) நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 8ஆம் தேதி ஆளுநர் உரை மீதான விவாதத்தில் ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கிட்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “அமெரிக்கா, இங்கிலாந்து, ஜொ்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இரட்டை குடியுரிமைக்காக இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளது. அதைப்போல இலங்கையுடன் ஒரு ஒப்பந்தம் போட வேண்டியதுதான். அதனால், இலங்கைத் தமிழா்களுக்கு இரட்டைக் குடியுரிமை என்பது சாத்தியமான ஒன்றுதான்” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் இரட்டை குடியுரிமை தொடர்பான அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, இன்று உரிமை மீறல் பிரச்சினையைக் கொண்டுவந்தார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், “இரட்டை குடியுரிமை சாத்தியமில்லை என்று மத்திய அமைச்சர் பேசியுள்ளார். ஆனால், இரட்டை குடியுரிமை சாத்தியம் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது இலங்கைத் தமிழர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால், உரிமை மீறல் தொடர்பாக அமைச்சர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. இதைத்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் பல ஆண்டுகளாக வலியுறுத்திவந்தார். தமிழக அரசின் நிலைப்பாட்டை இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனும் பாராட்டியுள்ளார்” என்று தெரிவித்தார்.

உரிமை மீறல் பிரச்சினையை எடுத்துக்கொள்ள மறுத்த சபாநாயகர் தனபால், “இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும் என அமைச்சர் சொன்னதில் அவை உரிமை மீறல் எதுவும் இல்லை” என்று அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துரைமுருகன் தலைமையில் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை தருவதற்கான அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது. இரட்டை குடியுரிமை வழங்க முடியாது என மத்திய அமைச்சர் மறுத்துவிட்டார். ஆனால், இரட்டை குடியுரிமை தருவோம் என்று சொல்லி இந்த விஷயத்தை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திசைதிருப்பியுள்ளார். இதற்கு இன்று விளக்கம் அளித்த அமைச்சர், வேறு ஏதேதோ பேசுகிறார். இதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம். அவைக்கு தவறான தகவலை தந்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை” என்று தெரிவித்தார்.

த.எழிலரசன்

செவ்வாய், 18 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon