மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

திமுக முன்னாள் அமைச்சர்களுக்குத் தொடர்பு: ஜெயக்குமார்

திமுக முன்னாள் அமைச்சர்களுக்குத் தொடர்பு: ஜெயக்குமார்

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் முன்னாள் அமைச்சர்களுக்குத் தொடர்பு இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 161ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் இன்று (பிப்ரவரி 18) மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் சட்டமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், 2006 முதல் 2008 வரை மோட்டார் வாகன ஆய்வாளர், உதவி பல் மருத்துவர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. அப்போது திமுகவுக்கு நெருங்கியவரான செல்லமுத்து டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டார். 13 பேரை உறுப்பினர்களாக நியமித்தனர். இவர்கள் அதிகளவில் ஊழலில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது. இதில் செல்லமுத்து வீட்டில் கட்டுக் கட்டாகப் பணம் எடுக்கப்பட்டது. பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதில் 15/4/2010ல் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அலுவலக முத்திரையோடு ’இந்த பதவிகளுக்குத் தேர்வு செய்ய வேண்டும்’ என்று கூறி அவரது கையெழுத்திட்ட கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் கையெழுத்திட்ட கடிதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. விரைவில் உண்மை வெளியில் வரும். அப்போது பரிந்துரை செய்தவர்கள் சிறைக்குச் செல்வார்கள் என்று தெரிவித்தார்.

தற்போது அதிமுக ஆட்சியில் ஊழல் குறித்து பாரபட்சமின்றி வெளிப்படையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் திமுகவும், அதிமுகவும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். மத்திய சென்னை எம்.பி.தயாநிதி மாறன் அமைச்சர் ஜெயக்குமாருக்கு முறைகேட்டில் தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டினார். இதையடுத்து ஜெயக்குமார் முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவுவுக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டினார்.

தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த அப்பாவு, என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என்று சவால் விடுத்திருந்தார். இந்த சூழலில் தற்போது திமுக முன்னாள் அமைச்சர்களுக்குத் தொடர்பு இருப்பதாக ஜெயக்குமார் கூறியுள்ளார்.

கவிபிரியா

செவ்வாய், 18 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon