மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

சிஏஏ: சட்டமன்றத்தில் ஸ்டாலின் பேசியது என்ன?

சிஏஏ: சட்டமன்றத்தில் ஸ்டாலின் பேசியது என்ன?

சட்டமன்றத்தில் சிஏஏ தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படாதது குறித்து ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று (17.02.2020) நேரமில்லா நேரத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், “நான் ஏற்கனவே குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஒரு தீர்மானத்தை இந்த அவையில் கொண்டு வர வேண்டும் என்று உங்களின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறேன்.

கடந்த கூட்டத்தொடரில் அது ஆய்வில் இருக்கிறது என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். இந்தக் கூட்டத் தொடர் தொடங்கிய நேரத்திலும் உங்களின் கவனத்திற்கு நான் கொண்டு வந்திருக்கிறேன். மற்ற மாநிலங்களைப் போல, தமிழக சட்டமன்றத்திலும் அதை நிறைவேற்றித் தர வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டம் - சிஏஏ, என்பிஆர், என்ஆர்சியை எதிர்த்து நம்முடைய தமிழகமும் டெல்லியைப் போல ஒரு போராட்டக் களமாக மாறிக்கொண்டு வருகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பல நாட்களாக அமைதியாக அறவழியில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாகத்தான் சென்னை வண்ணாரப்பேட்டையில் அறவழிப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெண்கள் அமைதியாக உட்புறச் சாலையில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்பு கொடுத்த காவல் துறைக்கும், போராட்டம் நடத்திய அவர்களுக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் தடியடி நடத்துமாறு காவல் துறையைத் தூண்டிவிட்டது யார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. அந்தத் தூண்டுதலால் அங்கு மிகப்பெரிய வன்முறை அரங்கேறி இருக்கிறது. அப்படி சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு உடனடியாக நம்முடைய முதலமைச்சரோ, அமைச்சர்களோ நேரில் சென்று கொஞ்சம் அமைதிப்படுத்தி இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. போராடியவர்களை விடுதலை செய்வதென்பது ஒரு நல்ல அறிகுறிதான். அதை நான் வரவேற்க விரும்புகிறேன். அதே நேரத்தில், அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்” என்று கேட்டுக்கொண்ட ஸ்டாலின்,

“போராட்டம் நடைபெறும் இடங்களில் இந்த அரசு உரிய பாதுகாப்பு வழங்கி அமைதி திரும்பக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி இந்தச் சட்டமன்றத்தில் தற்போது நடைபெறும் கூட்டத் தொடரிலேயே ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும். இதுதான் போராடிக்கொண்டிருக்கும் மக்களுடைய கோரிக்கை மட்டும் இன்றி, திமுகவின் கோரிக்கையாகவும் இருக்கிறது. எனவே தமிழக மக்களின் உணர்வுகளை இந்த அரசு மதிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

மேலும், “குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்ததற்குப் பிராயச்சித்தமாக, பெற்றோரின் பிறந்த ஊர், பிறந்த தேதி கேட்கும் என்பிஆர் கணக்கெடுப்பைத் தமிழகத்தில் நடத்த மாட்டோம் என இந்த அரசு தெளிவாக அறிவிக்க வேண்டும். வழக்கமான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தினால் அதில் நாங்கள் குறுக்கிட மாட்டோம். அது தவறும் கிடையாது. ஆனால் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களையும் துன்பப்படுத்தக்கூடிய, துயரப்படுத்தக்கூடிய என்பிஆர் என்ற தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை எடுக்க அனுமதி இல்லை என்றும், குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் இந்த அவையில் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்” என்றும் பேசினார்.

இதற்கு மறுப்புத் தெரிவித்த சபாநாயகர் தனபால், சட்டப்பேரவை விதி 173ஐ சுட்டிக்காட்டி, “ஒரு கூட்டத் தொடரின்போது விவாதிக்க முடியாது என்று அனுமதி மறுக்கப்பட்ட விஷயத்தை மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது” என்று தெரிவித்ததோடு, “சிஏஏ பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பில்லை. சிஏஏ தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றுவதற்கு வாய்ப்பில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு எழுத்துபூர்வமாக விளக்கம் அளித்துவிட்டோம்” என்று தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கடிதம் கொடுத்திருந்தேன். கடந்த கூட்டத்தொடரின்போது ஒவ்வொரு நாளும் கேட்டதற்கு, ஆய்வில் இருக்கிறது என்றே சபாநாயகத்தில் பதில் அளித்துக்கொண்டிருந்தார். நிராகரிக்கவில்லை. தற்போது கூட்டத் தொடர் தொடங்குவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னரே சபாநாயகர் கவனத்துக்கு நான் கொண்டு வந்திருக்கிறேன். இன்று நேரமில்லா நேரத்தைப் பயன்படுத்தி, அது என்னவாயிற்று என்று கேட்டோம்.

சிஏஏவுக்கு எதிராகப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை குறித்து “ஏற்கனவே நீங்கள் சட்டமன்றக் கூட்டத் தொடரில் வைத்த கோரிக்கையை நான் நிராகரித்துவிட்டால் அதை மீண்டும் அடுத்த கூட்டத் தொடரில் வைக்கக் கூடாது” என விதிமுறைக்கு ஒரு தவறான விளக்கத்தைக் கூறி சபாநாயகர் பதில் சொன்னார். அது விவாதிக்கப்படவில்லை. விவாதிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டு இருந்தால் ஏற்றுக்கொள்கிறோம்.

அது ஆய்வில் இருக்கிறது என்றுதான் சபாநாயகர் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். சட்டமன்ற விதி 174இல் தெளிவாக இருக்கிறது. தனித் தீர்மானம் ஒன்று அரசுக்குச் செய்யப்படும் பரிந்துரை வடிவிலோ, பேரவையின் கருத்தை அறிவிக்கும் முறையிலோ, எக்காரணத்திற்கேனும் பேரவையின் குழு ஒன்றை நியமிப்பதற்குக் கொண்டுவரப்படும் தீர்மான வடிவிலோ அல்லது தீர்மானத்தின் பொருளுக்கேற்ப வேறு எந்த வடிவிலோ இருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே கூட்டத் தொடரில் விவாதிக்கப்படும் பொருள் குறித்து மீண்டும் விவாதம் எழுப்புவதாக அமையக் கூடாது என்பதுதான் அந்த விதிமுறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

ஆனால் விவாதிக்க முடியாது என்று எழுத்துபூர்வமாகப் பதில் கொடுத்துள்ளதாக சபாநாயகர் கூறியிருக்கிறாரே என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “பதில் வேறு, விவாதிப்பது வேறு. விவாதிக்கவில்லை. விவாதித்து மறுத்திருந்தால் ஏற்றுக்கொண்டிருப்போம்” என்று விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து மீண்டும் அவை நடவடிக்கைகளில் திமுக உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

-த.எழிலரசன்

செவ்வாய், 18 பிப் 2020

chevronLeft iconமுந்தையது