wமூன்று ஆண்டு எடப்பாடி அரசு: சாதனையா? வேதனையா?

politics

விரைவில் ஆட்சி கவிழும் என எதிர்க்கட்சிகள் சொல்லிவந்த வேளையில் பல்வேறு தடைகளைத் தாண்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து, நான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. அரசின் சாதனைகள் என தமிழக அரசு சில புள்ளிவிவரங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதில் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு துறைகளுக்கான வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக 16,382 கோப்புகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்தில் முடிவெடுப்பது விரைவாக உள்ளதாக தெரிவிக்கிறார்கள் அரசு அதிகாரிகள். சராசரியாக ஒரு கோப்பைப் பார்த்து கையெழுத்திட முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு நாள் மட்டுமே எடுத்துக்கொள்கிறார். இதற்கு நேர்மாறாக ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோப்புகள் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டதெல்லாம் நடந்தது. முதல்வர் அலுவலகம் என்பது அதிகாரத்தில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் எளிதில் அணுகக் கூடிய இடமாக மாறியுள்ளது. முதல்வரின் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டங்கள் மூலம் 4.8 லட்சம் மனுக்கள், அம்மா திட்டத்தின் மூலம் பெறப்பட்ட 64 லட்சம் மனுக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஜெயலலிதா ஆட்சியின் கடைசி காலங்களில் தமிழகம் முதலீட்டாளர்களுக்கான நட்பு மாநிலமாக பார்க்கப்படவில்லை. ஏனெனில், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்று திரும்பிய பிறகு பல்வேறு பணிகளுக்கான கோப்புகள் அப்படியே முடங்கிவிட்டன. பல்வேறு திட்டங்கள் குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டங்களை துவங்கி வைப்பதை பார்க்கமுடிகிறது.

ஜெயலலிதா அண்டை மாநிலங்களுடனான உறவில் தூரமாக விலகி இருந்தார். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பக்கத்து மாநிலங்களுடன் நல்லுறவைப் பேண முயற்சிக்கிறார். அதன் ஒரு படிதான், கேரளா சென்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து நதிநீர் பிரச்சினையை தீர்க்க முயற்சித்தது. இதனையெல்லாம் தாண்டி அனைத்து மக்களின் வரவேற்பையும் பெற்ற எடப்பாடி அரசின் முக்கியமான சாதனை என்பது தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்தது.

**குடிமராமத்து நாயகனா?**

இந்த மூன்று ஆண்டு அரசில் இவ்வளவு சாதகமான அம்சங்கள் இருந்தாலும், அதனைவிட பல்வேறு பாதகமான சம்பவங்கள் கொட்டிக்கிடப்பதையும் பார்க்க முடிகிறது.

இந்த மூன்று வருடங்களில் தமிழக அரசின் மிகப்பெரிய சாதனை என்று காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதையும், குடிமராமத்து பணிகளையும் சொல்கிறார்கள். ஒருபடி மேலே சென்று குடிமராமத்து நாயகன் என்றே முதல்வரை அழைக்கத் தொடங்கிவிட்டனர் அதிமுகவினர்.ஆனால், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்திய பிறகே காவிரி மேலாண்மை ஆணையம் மத்திய அரசால் அமைக்கப்பட்டது. அதுபோலவே குடிமராமத்துப் பணிகள் சரியாக நடைபெற்றிருந்தால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்கள் தண்ணீருக்காக அல்லாட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

அதற்கடுத்தப்படியாக இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக சுமார் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் கூறுகிறார்கள். ஆனால், 3 லட்சம் கோடி முதலீடுகள் மூலம் எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், இந்தத் திட்டங்கள் எப்போது நிறைவுபெறும் என்பதற்கான எந்த விவரங்களையும் சொல்லவில்லை.

மூன்று ஆண்டுகளில் விவசாயிகள் பிரச்சினை தமிழகத்தின் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக இருந்தது. விவசாயிகளின் தொடர்ச்சியாக போராட்டங்களை மேற்கொண்டனர். தன்னை ஒரு விவசாயி என்று சொல்லிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம்-சென்னை எட்டுவழிச் சாலை அமைப்பதற்காக விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். கடும் எதிர்ப்பு எழுந்த நிலையிலும், சிலர்தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என விளக்கம் தந்தார்.

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராடிய நெடுவாசல் விவசாயிகள், பொதுமக்கள் மீது வழக்கு, துண்டு பிரசுரம் விநியோகித்த மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது, கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடிய பேராசிரியர் ஜெயராமன் கைது செய்யப்பட்டது, இத்தனைக்கு மேலாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது 14 பேர் வரை சுட்டுக்கொல்லப்பட்டது உள்ளிட்டவை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியின் கறுப்புப் பக்கங்களாகவே உள்ளது.

அண்மையில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், இதுதொடர்பாக மத்திய அரசுதான் அறிவிப்பு வெளியிட்டு, நிதி ஒதுக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இதனையும் அரசு தெளிவுபடுத்தவில்லை.

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து பல்வேறு திட்டங்களையும், நிதிகளையும் பெறுவோம் என்கிறார் முதல்வர். ஆனால், தமிழகத்திற்கு வர வேண்டிய நிலுவைத் தொகை மட்டும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசிடம் வலுவான எதிர்ப்பை பதிவு செய்யவில்லை. புதிய தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கமான 5,8ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை அமல்படுத்திவிட்டு, மிகப்பெரிய எதிர்ப்பின் விளைவாக அதனை திரும்பப் பெற்றனர். தனது சொந்த மாவட்டமான சேலத்திற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார், மற்ற மாவட்டங்களுக்கு போதிய முக்கியத்துவம் தருவதில்லை என்று அதிருப்தியும் உள்ளது.

இதுபோலவே குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக அரசின் எம்.பி.க்கள் ஆதரவு காரணமாகவே அது நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், சிஏஏவால் இந்தியாவில் வசிக்கும் யாரும் எந்த பாதிப்பும் இல்லை என்ற பொத்தம் பொதுவான விளக்கத்தையே முதல்வர் முன்வைத்துள்ளார். மொத்தத்தில் இந்த மூன்று ஆண்டு ஆட்சியில் சாதனைகளைத் தாண்டி வேதனைகளும் நிறைந்திருக்கின்றன.

**த.எழிலரசன்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *