மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

ஸ்டாலினை மீண்டும் சீண்டும் ராமதாஸ்

ஸ்டாலினை மீண்டும் சீண்டும் ராமதாஸ்

மது ஆலைகளை மூடும் திமுகவின் வாக்குறுதி என்னவானது என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

2016 சட்டமன்றத் தேர்தலின்போது, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, அவர் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 1,000 மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2295 மதுக்கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது மொத்தம் 5152 டாஸ்மாக் கடைகள் உள்ளன.

இதுதொடர்பான கருத்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது?சட்டப்பேரவையிலும்,மக்கள் மன்றத்திலும் சொல்வது ஒன்று; செய்வது வேறு என அதிமுக போட்டு வரும் இரட்டை வேடம் இது என்று விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று (பிப்ரவரி 14) தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் மதுக்கடை எண்ணிக்கை கூடி விட்டது. படிப்படியாக மதுவிலக்கு என்ற அறிவிப்பு என்ன ஆனது என்று ஸ்டாலின் கேட்டுள்ளார், சரி தான். அதேபோல திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் எண்ணிக்கையும் ஒன்று கூடிவிட்டது. மது ஆலைகளை மூடுவதாக 2016ல் திமுக அளித்த வாக்குறுதி என்னவானது என்பதையும் கேளுங்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “தமிழகத்தில் மூடப்பட்ட 400 மதுக்கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் அரசின் கொள்கையாக இருக்க வேண்டுமே தவிர மதுக்கடைகளை திறப்பது அல்ல” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே முரசொலி விவகாரம் தொடர்பாக ஸ்டாலினை, ராமதாஸ் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், தற்போது மதுக் கடைகள் விவகாரத்திலும் ஸ்டாலினை விமர்சித்துள்ளார் ராமதாஸ்.

சனி, 15 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon