மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

ரஜினிக்கு இணை விஜய்யா, அஜித்தா? -ராஜேந்திரபாலாஜி பதில்!

ரஜினிக்கு இணை விஜய்யா, அஜித்தா? -ராஜேந்திரபாலாஜி பதில்!

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீண்டும் மடை திறந்த வெள்ளமாய் செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார்.

இன்று (பிப்ரவரி 15) விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி பட்ஜெட் பற்றிய திமுக தலைவர் ஸ்டாலின் கருத்துக்கு பதிலளித்தார். அப்போது அவர்,

“இது இந்த அரசின் கடைசி பட்ஜெட் அல்ல. மீண்டும் தொடர இருக்கும் எங்கள் அடுத்த ஆட்சிக்கான முதல் பட்ஜெட் ஆக இருக்கும். நிதிப் பற்றாக்குறை என்பது காலங்காலமாக வந்துகொண்டிருக்கும் விஷயம். மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்போது, வரி விதிக்கப்படாதபோது பட்ஜெட்டில் பற்றாக்குறை வருவது இயல்பு. அதை சமாளிப்போம்” என்றார்.

திமுக, அதிமுக அரசுகளின் தவறான நடவடிக்கைகளால்தான் பற்றாக்குறை பட்ஜெட் ஆக இருக்கிறது என கமலஹாசன் கூறியிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “கமலஹாசன் ஒரு பஞ்சாயத்து தலைவர் ஆகி, அந்த பஞ்சாயத்தில் பட்ஜெட் போடட்டும். அதைப் பார்த்த பிறகுதான் அவரது கருத்தை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதை முடிவு பண்ணலாம் ” என்றார் ராஜேந்திர பாலாஜி.

ரஜினிக்கு இணையாக விஜய் வளர்ந்து வருவதால் அவர் மீது பாஜக அரசின் வருமான வரித்துறை ரெய்டு நடந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றனவே என்ற கேள்விக்கு,

“வருமான வரித்துறை எங்கள் கட்சி ஆட்களிடமும்தான் சோதனை நடத்தினார்கள். அவர்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சோதனை போடுகிறார்கள். சோதனையில் ஏதாவது கிடைத்தால் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கிறார்கள். இல்லையென்றால் வேறு நடவடிக்கைக்கு போய்விடுகிறார்கள். அதனால் வருமான வரித்துறையில் அரசியல் ஏதுமில்லை. அது ஒரு தனி அமைப்பு.

அதுவும் ரஜினிக்கு இணையானவராக யாரும் இப்போது கிடையாது. ரஜினிக்கு ஈக்குவலானவர் என்றால் அது அஜித் ஒரு ஆள்தான். அது இரண்டுதான் ஜல்லிக்கட்டுக் காளைகள். அது தலை, இது மலை” என்று பதிலளித்தார் ராஜேந்திரபாலாஜி.

-வேந்தன்

சனி, 15 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon