மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

ஜெயக்குமார் வெளியிட்ட கடிதத்தில் இருந்தது என்ன?

ஜெயக்குமார் வெளியிட்ட கடிதத்தில் இருந்தது என்ன?

டெல்டா விவசாய பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் வழங்கிய கடிதத்தை மீன்வளத் துறை அமைச்சர்ஜெயக்குமார் இன்று (பிப்ரவரி 15) வெளியிட்டார்.

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படுவதாக முதல்வர் அறிவித்த மறுநாள் (பிப்ரவரி 10) அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி சென்று மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்துப் பேசினார். அப்போது, காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக மாற்றுவது தொடர்பாக முதல்வர் எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சரிடம் வழங்கியதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதன் விவரங்கள் என்னவென்று வெளியில் கூறப்படாத நிலையில், அந்த கடிதத்தில் என்ன இருந்தது என்பதை இன்றே வெளியிட வேண்டும். இல்லையெனில் அக்கடிதத்தை நானே வெளியிடுவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் முதலமைச்சரின் ஒப்புதலுடன், என்னுடைய தலைமையில் எங்கள் குழு தயாரித்த கடிதத்தைப் பத்திரிகைகளுக்கு வெளியிடுகிறேன் என்று அக்கடிதத்தை வெளியிட்டார் அமைச்சர் ஜெயக்குமார். அதில், “காவிரி டெல்டா பகுதிகள் அனைத்தும் விவசாயத்தை சார்ந்ததாகும். ஹைட்ரோ கார்பன் , மீத்தேன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் 4266 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படும். அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தினசரி ஒரு லட்சம் கிலோ லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்படும். இதனால் நிலத்தடி நீர்ப் பற்றாக்குறை ஏற்படுவதோடு, கடல்நீரும் உட்புகும், காற்று மாசுபாடு ஏற்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத்திட்டம் குறித்து முடிவெடுப்பதற்கு முன்பாக மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2015ஆம் ஆண்டே அறிவிப்பு வெளியிட்டிருந்தார் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், டெல்டா பகுதிகளில் 28 ஏக்கர் நிலப்பரப்பில் மாநிலத்தின் 32 சதவிகித உணவு உற்பத்தி நடைபெறுகிறது. வறட்சி,புயல், வெள்ளம் ஆகியவற்றால் எளிதில் பாதிக்கக்கூடிய பகுதியாக டெல்டா மாவட்டங்கள் இருக்கின்றன. ஏற்கனவே கஜா பாதிப்பால் 65 லட்சம் தென்னை மரங்கள் அழிந்துள்ளன. இந்நிலையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் கொண்டு வந்தால் விவசாயத்தை நம்பியிருக்கும் குடும்பங்கள் பாதிக்கப்படும்.

பெரும்பாலான விவசாய பாசனங்களுக்கு ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தான் தண்ணீர் எடுக்கப்படுகிறது, இச்சூழலில் அங்கு இந்த திட்டங்களுக்காகப் போடப்படும் பைப்லைன் ஆகியவற்றால் நிலப்பரப்பு பாதிக்கப்படும்.

1985ஆம் ஆண்டு முதல் ஓஎன்ஜிசி நிறுவனம், டெல்டா பகுதிகளில் எண்ணெய் மற்றும் கேஸ் ஆகியவற்றை எடுத்து வருகிறது. இது மாநில மற்றும் மத்திய நிறுவனங்களால் கண்காணிக்கப்படுகிறது. இந்த பகுதியில் இதற்கு மேலும் திட்டங்கள் கொண்டுவரப்பட்டால் நிலத்தின் சமநிலை பாதிக்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் கிடைக்கக்கூடியதாக சொல்லப்படும் பலன்களை விடப் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். பைப்லைன் உடைந்து எண்ணெய் வெளியேறுவது உள்ளிட்டவற்றால் மனித உயிர்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும்.

பல்வேறு கலாச்சார தலங்களுக்குப் பெயர்போன இந்த பகுதியை ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் அழித்துவிடக்கூடாது. எனவே எதிர்வரும் காலங்களில் இதுபோன்று திட்டங்கள் செயல்படுத்துவதாக இருந்தால் அதனை நிறுத்த வேண்டும். டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ஏற்கனவே மாநில அரசு அறிவித்துவிட்டது என்பதால் இதற்கு மத்திய அரசு உரிய ஆதரவு கொடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடிதத்தை வெளியிட்டதன் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

-கவிபிரியா

சனி, 15 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon