}உங்களுக்குத் தெரியாமல் உங்கள் மீது ரூ. 57,000 கடன்!

politics

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2020-21ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் நிதி நிலை அறிக்கையை துணை முதல்வரும் , நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் இன்று (பிப்ரவரி 14) தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை என்றும், வேலைவாய்ப்புகள் உருவாக்கம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், கடன் சுமை அதிகரித்துவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

**திமுக தலைவர், ஸ்டாலின்**

இந்த பட்ஜெட்டில் தொலைநோக்குத் திட்டங்களும் இல்லை, வளர்ச்சித் திட்டங்களும் இல்லை. 2011 வரை திமுக ஆட்சியில் இருந்த போது தமிழ்நாட்டின் கடன் சுமை ரூ.1லட்சம் கோடி தான். 65 ஆண்டுகள் வரை அதுதான் நிலை. அதிமுக ஆட்சியின் 10ஆண்டுகளில் கடன்சுமை 3மடங்கு உயர்ந்து, ரூ. 4.6லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.நம் ஒவ்வொருவர் தலையிலும், ரூ.57,000 கடன்சுமை ஏறி உள்ளது.

**பாமக நிறுவனர், ராமதாஸ்**

நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாசனத் திட்டங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.அதேநேரத்தில் வரி தவிர்த்த அரசின் பிற வருவாய்களை அதிகரிக்க எந்தத் திட்டமும் அறிவிக்கப்பட வில்லை. தமிழகத்தின் கடன்சுமை கட்டுப்பாடின்றி நான்கரை லட்சம் கோடிக்கும் கூடுதலாக அதிகரித்து இருப்பது கவலையளிக்கிறது.

தூத்துக்குடியில் சுற்றுச் சூழலை சீர் கெடுத்து வந்த ஸ்டெர்லைட் ஆலை நீண்ட போராட்டத்திற்கு பிறகு மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு புதிதாக ரூ.49,000 கோடி செலவில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை அமைப்பது சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு வழிவகுக்கக்கூடும்.

**தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், கே.எஸ்.அழகிரி**

இந்த நிதிநிலை அறிக்கையில் புதுமையான அறிவிப்புகள் எதுவும் இல்லை. தொலைநோக்குத் திட்டங்கள் இல்லை. கண்துடைப்பு அறிவிப்புகள் தான் அதிகம் காணப்படுகின்றன. தமிழக அரசின் கடன் சுமை ரூபாய் 4 லட்சத்து 56 ஆயிரத்து 660 கோடி அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை என்பது வளர்ச்சியை ஏற்படுத்துவதையோ, வேலைவாய்ப்பை பெருக்குவதையோ, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையோ நோக்கமாகக் கொண்டு அமையாத நிலையில் அ.தி.மு.க.வின் இறுதி பட்ஜெட் மக்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

**மதிமுக பொதுச் செயலாளர், வைகோ**

2011 ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 610 கோடியாக இருந்த தமிழகத்தின் கடன் சுமை, சுமார் 5 இலட்சம் கோடியாக அதிகரித்து இருப்பதுதான் இந்த அரசின் சாதனை.வருவாய் பற்றாக்குறை 22 ஆயிரத்து 226 கோடி ரூபாய் என்ற நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு நிதி ஆதாரம் எங்கே இருக்கிறது?

**சிபிஎம் மாநிலச் செயலாளர், கே.பாலகிருஷ்ணன்**

2020-21 நிதிநிலை அறிக்கை தமிழக அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் ஆகும். இது மாதிரியான வாய்ப்பினை மீண்டும் ஒருமுறை அதிமுகவிற்கு தமிழக மக்கள் வழங்கமாட்டார்கள் என்பதை இந்த பட்ஜெட் உரை தெளிவாக்குகிறது. மாநில அரசின் வரி வருமானம் வேகமாக குறைந்து, நிதி நிர்வாகம் மோசமாகியுள்ளது.

உலக வங்கியிடம் கடன் வாங்குவதால் மோசமான நிபந்தனைகளை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இதுபற்றி எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தமிழக மக்களை அடகு வைக்கும் நிலைமைக்கு அதிமுக அரசு வந்துள்ளது. மொத்தத்தில் தமிழக அரசின் இந்த பட்ஜெட் தமிழக பொருளாதாரம் திவாலாக்கப்படுவதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

**சிபிஐ மாநிலச் செயலாளர், முத்தரசன்**

அடுத்த ஆண்டு எதிர் கொள்ளும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் மக்கள் ஆதரவைப் பெற வேண்டும் என்ற ‘ஆசை’ யில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் அலங்கார வார்த்தைகளால் கட்டப்பட்ட தோரணங்களாக நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. இது அஇஅதிமுக தேர்தல் பரப்புரைக்கான தயாரிப்பு தவிர வேறொன்றும் இல்லை.

**விசிக தலைவர், திருமாவளவன்**

தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட் வளர்ச்சிக்கு வழிவகுக்காது. மாறாக கடன் சுமையைத்தான் அதிகரிக்கும். இது அடித்தட்டு மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கிற பட்ஜெட். மத்திய அரசிடமிருந்து தமிழக அரசுக்கு வர வேண்டிய சுமார் 7 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி பாக்கியை வலியுறுத்திக் கேட்டுப்பெற இயலாத தமிழக அரசு மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு வலித்து விடாமல் மென்மையான வார்த்தைகளில் அதை சுட்டிக் காட்டியிருக்கிறது.ஒட்டுமொத்தத்தில் இது மத்திய அரசின் பட்ஜெட்டைப்போலவே வளர்ச்சிக்கோ, வேலை வாய்ப்புக்கோ வழிவகுக்காத பட்ஜெட்.

**மக்கள் நீதி மய்யம் தலைவர், கமல்ஹாசன்**

தமிழகத்தின் ஆண், பெண் குழந்தைகள் மற்றும் இனி பிறக்கவிருக்கும் பிள்ளைகள் என ஒவ்வொருவரின் தலையிலும் சுமார் ரூ.57,000 ரூபாய் கடன் சுமை இன்றைய தேதி வரை ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. ‬ ‪இதன் முக்கிய காரணங்கள், மாறி மாறி சுரண்டி வரும் இரு கழகங்களே. இவர்களை அகற்றுவோம்.‬ தமிழக வருமானத்தைக் கூட்டுவோம்.‬கடனில்லாத் தமிழகத்தை உருவாக்குவோம். ‬மக்கள் கைகோர்த்தால் நீதி கிடைக்கும்.

இவ்வாறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

**த.எழிலரசன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *