மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 22 செப் 2020

மணிப்பூருக்கு ஒரு நீதி? தமிழகத்துக்கு ஒரு நீதியா?

மணிப்பூருக்கு ஒரு நீதி? தமிழகத்துக்கு ஒரு நீதியா?

தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் முடிவெடுப்பதற்கு காலக்கெடு விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அரசு மீது நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். கொறடா உத்தரவுக்கு எதிராக செயல்பட்ட இவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் சக்கரபாணி.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பு விசாரணையில் இருந்தது. கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், மணிப்பூர் தகுதி நீக்க வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி ரோகிண்டன் நாரிமன் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டி, சபாநாயகர் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்தார். இதனையடுத்து, சபாநாயகர் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக சட்டமன்றச் செயலாளர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று (பிப்ரவரி 14) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கும் நடவடிக்கைகளை தொடங்கிவிட்டோம்’ என்று சபாநாயகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் முடிவெடுப்பதற்கு காலக்கெடு விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, “சட்டத்தின்படி ஒரு முடிவை எடுங்கள் என்று சபாநாயகருக்கு வலியுறுத்தத் தேவையில்லை” எனக் கூறி வழக்கினை முடித்துவைத்தது.

தகுதி நீக்கம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிர்க் கருத்துக்களும் எழுந்துள்ளன.இதுதொடர்பாக சட்ட வல்லுநர்கள் சிலரிடம் பேசியபோது அவர்கள் மணிப்பூர் தகுதி நீக்க வழக்கின் உத்தரவையும், தமிழகத்திற்கு வந்துள்ள தீர்ப்பையும் ஒப்பிட்டுப் பேசினர்.

“மணிப்பூரில் தோனோஜம் ஷியாம் குமார் என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ பாஜகவில் இணைந்து அமைச்சராக பதவியேற்றார். அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென காங்கிரஸ் மனு அளித்தது. ஆனால், அதன் மீது அம்மாநில சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ரோஹின்டன் நாரிமன், அனிருத்தா போஸ், ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட 4 வாரங்களுக்குள் நிலுவையில் உள்ள தகுதி நீக்க மனுக்கள் குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு உத்தரவிட்டது.

அப்படி முடிவெடுக்க தவறிவிட்டால் எந்தத் தரப்பினரும் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும், ‘குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், நியாயமான காரணங்களுக்குள் சபாநாயகர் தகுதி நீக்க மனு மீது முடிவு எடுக்க வேண்டும். அதிகபட்சமாக 3 மாதங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும்’ என்றும் தெரிவித்திருந்தது.

மணிப்பூரில் கட்சி தாவிய எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்கக் கோருகிறார்கள். தமிழகத்தில் கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோருகிறார்கள் என்பதைத் தவிர இரண்டு வழக்குகளும் ஏறக்குறைய ஒன்றுதான். ஆனால், மணிப்பூர் வழக்கில் 4 வாரத்திற்குள் சபாநாயகர் முடிவெடுக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தின் ரோஹின்டன் நாரிமன் அமர்வு உத்தரவிடுகிறது. ஆனால், தமிழக வழக்கில் சபாநாயகருக்கு கால அவகாசம் விதிக்க முடியாது என மறுக்கப்படுகிறது. அப்படியென்றால் மணிப்பூர் வழக்கிற்கு ஒரு நீதி? தமிழகத் தகுதி நீக்க வழக்குக்கு ஒரு நீதியா” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

வெள்ளி, 14 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon