மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 18 ஜன 2021

ட்ரம்ப் வருகை: சுவர் எழுப்பி மறைக்கப்படும் குடிசைப் பகுதிகள்!

ட்ரம்ப் வருகை: சுவர் எழுப்பி மறைக்கப்படும் குடிசைப் பகுதிகள்!

அமெரிக்க அதிபரின் வருகைக்காக குஜராத்தின் குடிசைப் பகுதிகளை மறைக்கும் வகையில் சுவர் எழுப்பப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது மனைவியுடன் அரசு முறை பயணமாக வரும் 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியா வருகிறார். தலைநகர் டெல்லியைத் தவிர மோடியின் சொந்த ஊரான குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் மோரோடா மைதானத்தில் நடைபெறும் பிரமாண்டப் பொதுக் கூட்டத்தில் இரு தலைவர்களும் உரையாற்றுகின்றனர். ட்ரம்புக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்க மத்திய அரசும், குஜராத் அரசும் பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன.

டெல்லியிலிருந்து விமானம் மூலம் அகமதாபாத் செல்லும் ட்ரம்ப் - மோடி இருவரும், அங்கிருந்து சாலை மார்க்கமாக பொதுக் கூட்டம் நடக்கும் இடத்துக்குச் செல்கின்றனர். இந்த நிலையில் இருவரும் சாலை வழியாகச் செல்லும் சர்தார் வல்லபபாய் விமான நிலையத்திலிருந்து இந்திரா பாலம் வரை உள்ள குடிசைப் பகுதிகளை மறைக்கும் வகையில் சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. இதுதொடர்பான பணிகள் நடைபெறும் புகைப்படமும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குடிசைப் பகுதியை மறைக்கும் வகையில் 500 மீட்டர் நீளத்தில் 6-7 அடி உயரம் வரை சுவர் அமைக்கப்பட்டு வருகிறது எனப் பெயர் குறிப்பிட விரும்பாத அகமதாபாத் மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். “சரண் அல்லது சரணியாவாஸ் என்று அழைக்கப்படும் இந்த குடிசைப் பகுதியில் சுமார் 500 குடிசைகள் வரை உள்ளன. சுமார் 2,500 மக்கள் வரை இங்கு வாழ்கிறார்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அகமதாபாத் மேயர் பிஜல் பட்டேலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, “அதனை நான் பார்க்கவில்லை. அதுபற்றி எந்த விவரமும் எனக்குத் தெரியவில்லை” என்று மழுப்பலாகப் பதிலளித்துச் சென்றார். குடிசைப் பகுதி மக்களின் ஏழ்மை நிலையை ட்ரம்ப் பார்க்கக் கூடாது எனச் சுற்றுச் சுவர் கட்டப்படும் விவகாரம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

-த.எழிலரசன்

வெள்ளி, 14 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon