மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 22 செப் 2020

ஏமாற்றம் தருகிறது: பட்ஜெட் பற்றி விஜயகாந்த்

ஏமாற்றம் தருகிறது: பட்ஜெட் பற்றி விஜயகாந்த்

பட்ஜெட் தொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

2020-21ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் நிதி நிலை அறிக்கையை துணை முதல்வர் பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் இன்று (பிப்ரவரி 14) தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை என்றும், வேலைவாய்ப்புகள் உருவாக்கம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், கடன் சுமை அதிகரித்துவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள தேமுதிகவும் நிதிநிலை அறிக்கையில் குறைகள் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

பட்ஜெட் குறித்து அறிக்கை வெளியிட்ட தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், “2020-2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் பல திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. பல்வேறு திட்டங்களை நாம் வரவேற்றாலும், பட்ஜெட் என்பது நம் கனவாக மட்டும் அமையாமல், செயல் வடிவத்திலும் மக்களுக்கு நேரடியாக செல்லக்கூடிய திட்டங்களாக இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து, “வேலைவாய்ப்பிற்கான மிக முக்கிய அறிவிப்பு இல்லாதது, இளைஞர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மேலும் வேலைவாய்ப்பை உருவாக்க மாவட்டம் தோறும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கான அறிவிப்புகளும் இல்லை, இதன் மூலம் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லாதது சிறிது ஏமாற்றத்தை தருகிறது” என்று தெரிவித்துள்ள விஜயகாந்த்,

பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக செல்ல, சொல் வடிவில் இல்லாமல், செயல் வடிவமாக நிரூபிக்க வேண்டுமெனவும், இந்த பட்ஜெட் மூலம் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எல்லா வளங்களும், நலன்களும் பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு இத்திட்டங்கள் நேரடியாக சென்றடைய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

த.எழிலரசன்

வெள்ளி, 14 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon